பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த முகமது பைசான் கான் என்ற நபர் சத்தீஸ்கரில் இன்று கைது செய்யப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர், சத்தீஸ்கரின் ராய்பூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ரூ.50 லட்சம் கேட்டு ஷாருக் கானை மிரட்டிய விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராக மும்பை போலீஸ் சம்மன் அனுப்பிய நிலையில் அவர் ஆஜராகாததால் கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

முன்னதாக, குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர் முகமது பைசான் கான் தனது மொபைல் போன் திருடப்பட்டதாகவும், பின்னர் கடந்த வாரம் மிரட்டல் அழைப்பிற்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறினார். நவம்பர் 2ஆம் தேதி ‘திருடப்பட்ட போன்’ தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

முகமது பைசான் கான் பெயரில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணில் இருந்து மிரட்டல் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து மும்பை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகள் 308(4) (கொலை மிரட்டல் அல்லது பலத்த காயம் உள்ளிட்ட மிரட்டல்) மற்றும் 351(3)(4) (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.