சென்னை; சென்னையில் அதிகரித்து வரும் குற்றச்சபவங்கள் மற்றும் போதை பிரச்சினைகள் காரணமாக, ஒரே நாளில்,  சென்னையில் 73 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர்  அருண் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

சென்னையில் பணியாற்றும் 73 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், இந்த அதிரடி மாற்றம் அரங்கேறி உள்ளது காவல் துறையினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் தலைநகரம், தமிழகத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான சென்னையில் கடந்த சில தினங்களாகவே குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக செயின் பறிப்பு சம்பவங்கள், பாலியல் அத்துமீறல், திருட்டு, கொலை, வழிப்பறி, போதை பொருள் நடமாட்டம்  போன்ற சம்பவங்கள்  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  மேலும் காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.   மக்கள் மற்றும் வணிகர்களின் பாதுகாப்பில்  காவல்துறை போதிய கவனம் செலுத்துவதில்லை என்று பொதுமக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது.

தமிழ்நாட்டில் 2026ல் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால், திமுக ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றன. இதன் காரணமாக, முதல்வர் ஸ்டாலின் பல்வேறு கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்தும், செயல்படுத்தியும் வரும் நிலையில், சட்டம் ஒழுங்கையும் பாதுகாக்க காவல்துறை தலைவரை வலியுறுத்தி உள்ளார்.

இதைத்தொடர்ந்து,  சென்னை காவல் துறையில் அதிரடி மாற்றம் அரங்கேறி இருக்கிறது. சென்னை காவல் துறையில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் ஒரே நாள் இரவில் மாற்றப்பட்டு இருக்கின்றன. அதன்படி மொத்தம் 73 சப்இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

துரைப்பாக்கம், சாஸ்திரி நகர், ஐஸ் ஹவுஸ், ஐசிஎப், வாஷர்மேன்பேட்டை, புளியந்தோப்பு உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றிய ஆய்வாளர்கள் உள்ளிட்ட 73 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். சட்டம் ஒழுங்கு மட்டுமல்லாது, அனைத்து மகளிர் காவல் நிலையம், க்ரைம், குற்றப்பிரிவு உள்ளிட்ட அனைத்து காவல்துறைகளிலும் பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் ஒரே அடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றனர். ஒரே நாள் இரவில் அரங்கேறியுள்ள இந்த பணியிட மாற்றம் காவல் துறையினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே நேற்று ஐபிஎஸ் அதிகாரிகள்  இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.