ரியோடிஜெனிரோ: தென் அமெரிக்க கண்டத்தில் இருக்கும் அமேசான் மழைக்காடுகள் சார்ந்த நாடுகள் மட்டுமே இப்பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய வேண்டுமென கூறியுள்ளார் பிரேசில் நாட்டின் வலதுசாரி அதிபரும், அமேசான் காட்டுத் தீ ஏற்பட காரணமானவர் என்று குற்றம் சாட்டப்படுபவருமான ஜேர் போல்சோனாரோ.
செப்டம்பர் மாதம் தொடர்புடைய நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடி, அமேசான் மழைக்காட்டுப் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் அதன் மேம்பாடு குறித்து ஒன்றுகூடி கலந்தாலோசனை செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், ஃபிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான், தான் ஒருவர் மட்டுமே உலக சுற்றுச்சூழலின் மீது அக்கறையுள்ளவர் போல் காட்டிக்கொள்கிறார் என்றும் குற்றம் சாட்டினார் பிரேசில் அதிபர்.
அமேசான் காட்டுத் தீயை அணைக்கும் விஷயத்தில் சில வெளிநாடுகளின் உதவிகளைப் பெறுவதானது, பிரேசிலின் இறையாண்மைக்கு எதிரானது என்றும் கருத்து தெரிவித்துள்ளார் அந்நாட்டின் வலதுசாரி அதிபர்.
அமேசான் பாதுகாப்பு தொடர்பான அவரின் மோசமான கொள்கைகளால்தான், விவசாயிகள் உள்ளிட்ட வேறு பலரும் காட்டுத் தீயை ஏற்படுத்த காரணமாக அமைந்தது என்ற குற்றச்சாட்டு உலகெங்கிலும் தீவிரமாக உள்ளது.