காசி
காசியில் உள்ள இந்து பல்கலைக்கழகத்தில் பெரும் கலவரம், தடியடி ஆகியவை நடந்துள்ளது.
பா ஜ க ஆளும் உ பி மாநிலத்தில் காசியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை சிலர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், அந்த புகாருக்கு இதுவரை பல்கலைக்கழக நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நூற்றுக்கணக்கான மாணவர்களும், மாணவிகளும் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். துணைவேந்தர் பதவி வகிக்கும் கிரிஷ் சந்திர திரிபாதியை சந்திக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் பல்கலை நிர்வாகம் அதை மறுத்து விட்டது. கிரிஷ் சந்திர திரிபாதியின் இல்லம் அதே வளாகத்தில் உள்ளது. மாணவர்கள் அங்கு சென்று அவர் வீட்டின் முன்பு போராட்டத்தை தொடர்ந்தனர். கிரீஷ் அவர்களை சந்திக்க முடியாது என தெரிவித்து விட்டார்.
மாணவர்கள் மிகவும் ஆத்திரமடைந்து பல்கலைக்கழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர். போலீசார் வரவழைக்கப்பட்டு அவர்கள் மாணவ மாணவிகளை கலந்து செல்லுமாறு எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை. இதறிகிடையே போலீசார் மீது சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசியதால் தடியடி நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.
இந்த தடியடியில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு பல்கலைக் கழக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் 1200 மாணவர்கள் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்துள்ளனர். சுமார் 12 பேரை கலவரத்தை தூண்டிய குற்றத்தில் கைது செய்துள்ளனர்.
மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற உத்திரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் புனியா உட்பட பல காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் தடுத்து கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் மாநிலம் எங்கும் பரவவே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல எதிர்கட்சித் தலைவர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பா ஜ க அரசை ராகுல் கடுமையாக விமரிசித்துள்ளார்.
இந்த கலவரத்தை குறித்து மாணவர் ஒருவர், “கடந்த வியாழக்கிழமை அன்று முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் பல்கலை வளாகத்தில் உள்ள விடுதிக்கு வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் அவரை சுற்றி வந்து கலாட்டா செய்துள்ளனர். தொடக்கூடாத இடங்களை தொட்டு பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். பக்கத்தில் இருந்த காவலர்களும் அதை கண்டுக் கொள்ளவில்லை. அதனால் அந்த மாணவி வார்டனிடமும் நிர்வாகத்திடமும் புகார் கொடுத்தார். அவர்கள் அந்த மாணவி லேட்டாக வந்ததால் தான் இந்த விளைவு எனவும் அதற்கு அந்த மாணவிதான் பொறுப்பு எனவும் கூறி உள்ளனர். அந்த மாணவியின் பெயரை தெரிவிக்க நாங்கள் விரும்பவில்லை. அவருக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு எதிராக நாங்கள் போராட்டத்தை துவக்கினோம்” என கூறி உள்ளார்.
பாரதப் பிரதமர் மோடி காசிக்கு வருகை தந்து திரும்பிச் சென்ற சில மணி நேரங்களில் இந்த தடியடி சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத் தக்கது.