மும்பை

ழம்பெரும் இந்தி பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் தனது முழு ஆதரவும் ஏ ஆர் ரகுமானுக்குத்தான் என கூறி உள்ளார்.

சமீபத்தில் ஏ ஆர் ரகுமான் நடத்திய இசை நிகழ்வில் அவர் தமிழ் பாடல்கள் பாடியதற்காக ரசிகர்கள் அரங்கை விட்டு வெளியேறினர்.  இது குறித்து லதா மங்கேஷ்கர் தெரிவித்ததாவது :

”இசைக்கு மொழி பேதமில்லை.  ரகுமான்ஜியின் பல பாடல்கள் முதலில் தமிழில் வெளிவந்து புகழ் பெற்றவை.  பின்பு அவை இந்தி மொழியில் வந்து இந்தியிலும் புகழ் அடைந்தது.  என்னுடைய புகழ்பெற்ற இந்திப் பாடல்களில் சில பாடல்கள் வங்காள மொழியில் முதலில் புகழ் அடைந்தவை.  நான் இந்திப்பாடல்களை இசை நிகழ்ச்சியில் பாடும்போது, அதன் வங்காள மூலப்பாடலை பாடுமாறு என்னிடம் ரசிகர்கள் கேட்டதுண்டு.  என்னுடைய இந்த 70 வருட அனுபவத்தில் நான் அனைத்து பிராந்திய மொழிப்பாடல்களையும் மேடையில் பாடியுள்ளேன்.  எனது ரசிகர்களும் ரசித்து கேட்டதுண்டு.  இந்திப் பாடல்களை மட்டும்தான் கேட்பேன் என்பது ஆரோக்கியமானது அல்ல.  ரகுமான்ஜியின் இசையில் நான் தில்சே என்னும் இந்திப்படத்தில் ஜியா ஜலே (தமிழில் உயிரே படத்தில் நெஞ்சினிலே நெஞ்சினிலே) பாடலை இந்தி – மலையாள மொழியில் பாடி உள்ளேன்.  அந்தப் பாடலுக்கு மலையாள வரிகள் தனிச் சிறப்பை கொடுத்தன.  எனக்கு எல்லா மொழியிலுமே மேடையில் பாடப் பிடிக்கும்.  எனக்கிருந்த ஒரே பயம் உச்சரிப்பு சரியாக வரவேண்டும் என்பதே.  ஆனால் எந்த மொழி ரசிகரும் என்னிடம் உச்சரிப்பு தவறென சொன்னதில்லை.  மீண்டும் ரகுமான்ஜியின் ரசிகர்களுக்கு சொல்கிறேன். இசைக்கு மொழி ஒரு தடையே இல்லை” என்றார்