ஈரோடு: திமுக ஆட்சிக்கு வந்தால் கடைசி நேரத்தில் போடப்படும் அத்தனை டெண்டர்களும் ரத்து செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் தெற்கு மாவட்ட திமுக சட்டமன்றத் தொகுதிகளுக்கான “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: பெட்டியைத் தூக்கித் திரிகிறார் ஸ்டாலின். ஆனால் எனது ஆட்சியில் வீட்டில் இருந்தே புகார் அனுப்பலாம்” என்று சொல்லி இருக்கிறார் பழனிசாமி. வீட்டில் இருந்தபடியே புகார் அனுப்பலாம், உண்மைதான். ஆனால் செய்து தரமாட்டார்கள். இதுதான் பழனிசாமி ஆட்சி!
புகார் அனுப்பலாம் என்று பழனிசாமி சொன்னாரே தவிர, நிறைவேற்றுவேன் என்று சொல்லவில்லை. ஏனென்றால் அவருக்கு வாக்குறுதியை நிறைவேற்றத் தெரியாது. ஜெயலலிதாவால் 2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டம் தான் 1100க்கு போன் செய்தால், உங்கள் குறைகள் தீரும் என்ற திட்டமாகும். அந்தத் திட்டம் கடந்த ஐந்தாண்டுகளாக அமலில் இருந்ததா? அதில் சொல்லப்பட்ட மொத்த குறைகள் எவ்வளவு? அதில் தீர்க்கப்பட்ட குறைகள் எவ்வளவு? பழனிசாமியால் சொல்ல முடியுமா?
பல்வேறு துறைகள் மூலம் 3 மாதங்களில் 40 ஆயிரம் மதிப்பிலான டெண்டர் விடப்பட்டுள்ளது என்பதை நாளேடு ஒன்றில் விரிவாக எழுதி இருக்கிறார்கள். பொதுவாக தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்னதாக பெரிய டெண்டர்களை விட மாட்டார்கள். ஆனால் அதிமுக ஆட்சியில் கூச்சமே இல்லாமல் டெண்டர் கொள்ளை நடக்கிறது.
3,888 பணிகளுக்காக அவசர அவசரமாக டெண்டர் விட்டுள்ளார்கள். இந்த டெண்டர்களில் ஆர்வம் காட்டாத ஒப்பந்தகாரர்களுக்கு அமைச்சர்களே போன் செய்து, டெண்டர்களை எடுக்குமாறு கட்டாயப்படுத்துவதாக தகவல் வருகிறது.
ஒப்பந்ததாரர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது நிச்சயமாக, உறுதியாக அதிமுக ஆட்சிக்கு வராது. திமுக ஆட்சிக்கு வந்ததும் இது போன்ற டெண்டர்கள் அனைத்தும் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் என்று எச்சரிக்க கடமைப்பட்டுள்ளேன். இதை ஒப்பந்ததாரர்கள் உணர வேண்டும் என்று பேசினார்.