திருவண்ணாமலை : ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மலையில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு, நிலச்சரிவு எற்பட்ட பகுதியில் பாறை, மண்ணின் தன்மையை ஆய்வு செய்ய ஐஐடி பேராசிரியர் குழு வர இருப்பதாக தெரிவித்தார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த சூறாவளியுடன் பேய்மழை கொட்டியது. நேற்று அதிகனமழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள பெரும்பாலான பகுதிகள், கோயில் உள்பட பல இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டன. இதற்கிடையில், திருவண்ணாமலை வஉசி நகர் பகுதியில், தீபம் ஏற்றும் மலை பகுதியில் சுமார் 100 மீட்டர் உயரத்தில், திடீரென மண் சரிவு ஏற்பட்டு, ராட்சத பாறை உருண்டு, மலை பகுதியில் இருந்த ஒரு வீட்டின் மீது விழுந்தது.இதனால் அந்த வீட்டிற்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சிக்கி கொண்டனர். ராஜ்குமார், மீனா, கவுதம், வினியா, மகா, தேவிகா, வினோதினி ஆகியோர் வீடுகளில் சிக்கினர். அவர்கள் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் தொய்வடைந்து உள்ளன.
இந்த பரபரப்பு குறைவதற்குள், , திருவண்ணாமலையில் மேலும் ஒரு இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே நிலச்சரிவு ஏற்பட்ட வ.உ.சி. நகரில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் ராட்சத பாறை விழுந்தது. வ.உ.சி. நகர் கருமாரியம்மன் கோயிலின் பின்புறம் மலை அடிவாரப் பகுதியில் உள்ள வீடுகள் மீது பாறைகள் உருண்டு விழுந்தன. இதையடுத்து அப்பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 30 பேர், மாநில பேரிடர் மீட்பு படையினர் 50 பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. நிலச்சரிவால் மக்கள் அச்சத்தில் உள்ளனா். குறிப்பாக மகா தீபத்திற்கான திருவிழா தொடங்கி உள்ள நிலையில், மலையில் நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பது பக்தர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, மழை பாதிப்பு குறித்து அந்த பகுதிகளில் ஆய்வு செய்து வரும் அம்மாவட்ட அமைச்சர் எ.வ.வேலு, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளிலும் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “1965ம் ஆண்டுக்கு பிறகு, பிறகு திருவண்ணாமலையில் அதிக மழைப்பொழிவு இப்போதுதான் ஏற்பட்டு உள்ளது என்றவர், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருவதாகவும், தற்போதுதான் முதன்முறையாக மலையில் பாறை சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சேதமடைந்துள்ள 3 வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றவர், இடிபாடுகளில் 7 பேர் சிக்கியுள்ளனர். அவர்களை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் நேற்று முதல் முயன்று வருகின்றனர். ஒரு பாறை ஒன்று மிகப்பெரிதாக உள்ளது. இந்தப் பாறை உருண்டால், மேலும் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சேதம் ஏற்படும் போது, மலைகளை பிளந்து எடுக்கக் கூடிய பணி செய்பவர்களை, நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ஏற்காட்டில் இருந்து அழைத்துள்ளோம். மதியத்திற்குள் வந்துவிடுவார்கள். அதுவும் கீழே இருக்கும் மண் உறுதித்தன்மை பெற்ற உடனே தான் மலைகளை உடைக்க முடியும்.
தொடர்ந்து மழை பெய்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சூழலிலும் மீட்பு பணி நடந்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்புபடையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போதுமான அளவுக்கு மீட்பு பணிகளில் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெரிய சாலையாக இருந்திருந்தால், ஹிட்டாச்சி அல்லது ஜே.சி.பி.,யை விட்டு, 2 மணி நேரத்தில் அகற்றியிருக்கலாம். தற்போது, ஒருவர் வெளியே சென்றால் தான், மற்றொருவர் வரும் நிலை உள்ளது.
மேற்கொண்டு அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, சென்னை ஐ.ஐ.டி.,யின் பேராசிரியர் மோகன் மற்றும் பூமிநாதன் ஆகியோரை அங்கிருந்து முதல்வர் ஸ்டாலின் அனுப்பியுள்ளார். அவர்கள் வந்த பிறகு தான், கற்களை எல்லாம் அகற்றிய பிறகு தான், உள்ளே இருப்பவர்களின் நிலைமை தெரியும். அவர்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்று தான் நாங்கள் நினைக்கிறோம்.
மழையால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் மீட்பு பணிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மழை காலங்களில் பிரச்னைக்குரிய பகுதிகளைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும், எனக் கூறினார்.