சண்டிகர்:
குர்கானில் வாங்கி விற்பனை செய்யப்பட்ட நிலத்தில் முறைகேடு நடந்ததாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன், தனது அறிக்கையை நேற்று தாக்கல் செய்துள்ளது. அதில் சோனியா மருமகன் மீது குற்றம் சாட்டப்படுள்ளதாக கூறப்படுகிறது.
குர்கான் பகுதியில், 3.5 ஏக்கர் நிலத்தைசோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ‘ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி’ என்ற pரியல் எஸ்டேட் நிறுவனம் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த பிரச்சினையையொட்டி, ஆளும் பாரதிய ஜனதாஅரசு ஒரு நபர் விசாரணை கமிஷனை நியமித்தது.
அவர் 7.5 கோடி ரூபாய்க்கு வாங்கிய அந்த நிலத்தை அதை சில மாதங்களிலேயே, டி.எல்.எப்., என்ற நிறுவனத்துக்கு , 58 கோடி ரூபாய்க்கு விற்றார். இதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்டது.
அப்போதைய காங்கிரஸ் அரசு இந்த நிலத்துக்கு , குடியிருப்புகள் கட்டுவதற்கு அரசு அனுமதி அளித்தது. இந்த அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் கெம்கா கோப்பில் கையெழுத்திட மறுத்தார். அதைத் தொடர்ந்து, அவர் பல இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வதேரா மீதான இந்த நில மோசடி, கடந்த லோக்சபா தேர்தலிலும், ஹரியானா சட்டசபை தேர்தலிலும் எதிரொலித்தது.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதியஜனதா பெரும்பான்மை பெற்று, ஹரியானாவில் கட்டார் தலைமையில் அரசு அமைந்ததது. இதையடுத்து, ராபர்ட் வதேராவின் நில மோசடி குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி திங்கரா தலைமையில் ஒரு நபர் கமிஷன் மே மாதம் அமைக்கப்பட்டது.
6 மாதத்துக்குள் இந்த கமிஷன் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ராபர்ட் வதேரா விவகாரம் குறித்து மாநில அரசின் நகர்ப்புற வளர்ச்சி துறை, வதேராவின் நிறுவனங்களுடன் இணைத்து பேசப்பட்ட டிஎல்எப் நிறுவனம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகளிடம் கமிஷன் தலைவர் விசாரணை நடத்தினார். விசாரணை முடிந்தவுடன் கமிஷன் அறிக்கையை அரியானா முதல்வர் கட்டாரிடம் நேற்று ஒப்படைத்தார்.
அறிக்கை குறித்து நீதிபதி திங்க்ரா கூறியதாவது:
இந்த நில பேரத்தில் மோசடி நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனால்தான், 182 பக்கத்துக்கு அறிக்கை கொடுத்துள்ளேன்.
இந்த மோசடியில், யார் யார் பயனடைந்தனர் என்பது குறித்தும் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். ஆனால், அந்தப் பெயர்களை தற்போது தெரிவிக்க முடியாது.
இந்த அறிக்கையின் மீது, இனி நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, ஹரியானாவின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடா, சோனியா மருமகன் ராபர்ட் வதேரா ஆகியோருக்கு இந்த மோசடி யில் நேரடி தொடர்புள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த அறிக்கைக்கு, காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.