பாட்னா

சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பிய லாலு பிரசாத் யாதவ் வீட்டின் முன்பு அவர் மூத்த மகன் தர்ணா செய்துள்ளார்.

ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவுக்கு கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார்.   கடந்த 2018 ஆம் ஆண்டு லாலு பாட்னாவில் உள்ள தமது இல்லத்தில் இருந்து சிறைத் தண்டனை அனுபவிக்க சென்றார்.   சில மாதங்களுக்கு முன்பு லாலு விடுதலை செய்யப்பட்டார்.

மருத்துவச் சிகிச்சைக்காக லாலு தனது மூத்த மகள் மிசா பாரதியின்  டில்லி இல்லத்தில் தங்கி இருந்தார். நேற்று அவர் 3 ஆண்டுகளுக்குப் பிறகு பீகார் மாநிலத்துக்குத் திரும்பினார்.  அவர் மனைவியும் முன்னாள் பீகார் முதல்வருமான ராப்ரி தேvஇயும் உடன் வந்தார்.  அவருக்கு விமான நிலையத்தில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதிசய நிகழ்வாக எப்போதும் சண்டை இட்டுக் கொண்டு இருக்கும் லாலுவின் மகன்கள் தேஜஸ்வி மற்றும் தேஜ் பிரதாப் இருவரும் ஒற்றுமையாகத் தந்தையை வரவேற்று வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.    ஆனால் இந்த ஒற்றுமை வெகுநேரம் நீடிக்கவில்லை.  வீட்டுக்கு வந்த தந்தையுடன் தன்னை பேசவிடவில்லை என மூத்த மகன் தேஜ் பிரதாப் குற்றம் சாட்டி வீட்டுக்கு வெளியே தர்ணா செய்துள்ளார்.  இது கடும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.