பாட்னா: இந்த நாடாளுமன்ற தேர்தலில், பீகார் மக்கள் “செய் அல்லது செத்துமடி” என்ற உணர்வோடு செயல்பட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவ்.
பீகார் மக்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, “நமது அரசியலமைப்பு, நமது இடஒதுக்கீடு, நமது நாடு மற்றும் நமது சமூகம் என அனைத்துமே தற்போது ஆபத்தில் இருக்கின்றன. எனவே, இந்த தேர்தல்தான் அவற்றைக் காப்பதற்கான ஒரே வாய்ப்பு.
அவர்கள், என்னைத்தான் சிறையில் அடைத்துள்ளனரே தவிர, எனது எண்ணங்களை அல்ல. என்னை சிறையில் அடைத்த அந்த சக்திகள், வேறு ஏதேனும் சதிகளை அரங்கேற்றி பீகாரில் மீண்டும் வெல்லலாம். எனவே, நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
நமது இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்ய துடிக்கிறார்கள். நமது சுயமரியாதை மற்றும் தன்மானம் போன்றவை கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. உங்களின் வாழ்வை, 30 – 35 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்கு தள்ள முயல்கிறார்கள்.
இந்த தேர்தலில், உங்களுடைய வலுவை சோதிக்க அவர்கள் நினைக்கிறார்கள். எனவே, “செய் அல்லது செத்துமடி” என்ற மனநிலையுடன் செயல்படுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் லாலு பிரசாத் யாதவ்.
– மதுரை மாயாண்டி