பீகார் அரசியலின் தவிர்க்க முடியாத நபரான லாலுவுக்கு, மொத்தம் 9 பிள்ளைகள். பெண் பிள்ளைகள் 7 பேர், ஆண் பிள்ளைகள் 2 பேர்.
இதில், இளைய மகன்தான் தேஜஸ்வி. தனது மூத்த சகோதரர் தேஜ் பிரதாப் யாதவுடன் ஒப்பிடுகையில், உருவ ஒற்றுமையில், தனது தந்தையை அதிகம் ஞாபகப்படுத்துபவர் இவர். புஷ்டியான முகத்துடன், சற்று கவர்ச்சியான தோற்றத்தில் உள்ள தன் இளைய மகனை, தனது அரசியல் வாரிசாக அறிமுகம் செய்ய விரும்பினார் லாலு பிரசாத். லாலுவின் மூத்த மகள் மிசா பாரதியும் பீகார் அரசியலில் ஒட்டிக் கொண்டிருப்பது வேறு விஷயம். மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவும் மாநில அரசியலில் இருக்கிறார்.
ஆனால், தேஜஸ்விக்குத்தான் கிரீடம்! கடந்த 2015ம் ஆண்டு, தனது 25 வயதிலேயே, சட்டமன்ற தேர்தலில் இறக்கப்பட்டு, தந்தையின் செல்வாக்கால் வென்று, அதே செல்வாக்கால், நிதிஷ்குமார் அமைச்சரவையில் பீகார் துணை முதல்வராகவும் பதவியேற்றார் தேஜஸ்வி. அம்மாநிலத்தில், மிக இளம் வயதில் துணை முதல்வர் பொறுப்பேற்றவர் தேஜஸ்விதான்.
ஆனால், கூட்டணியில் ஏற்பட்ட பிணக்கு ஒருபுறம், பாரதீய ஜனதாவின் நெருக்கடி மறுபுறம் என, உடைந்த கூட்டணியால், தனது பதவியை 2 ஆண்டுகளில் இழந்த தேஜஸ்வி, மாநில சட்டசபையின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தார். 80 உறுப்பினர்களுக்கு இவர் தலைவராக இருந்தார்.
இவரின் தலைமையில், ஆர்ஜேடி – காங்கிரஸ் மற்றும் இதர சிறிய கட்சிகளின் கூட்டணி 2019 நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து பெரிய தோல்வியே கிடைத்தது. இந்நிலையில், தொடர்ந்து சிறை வைக்கப்பட்டிருந்தாலும், மனம் தளராத லாலு பிரசாத், பீகார் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வியை அறிவித்து, அவர் தலைமையில் ஒரு பெரிய கூட்டணியை, 2020ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக கட்டச் செய்தார்.
அவரின் முயற்சியும், நம்பிக்கையும் தற்போது வீண்போகவில்லை. பாரதிய ஜனதாவின் சித்து விளையாட்டுகளால் சிறிய வித்தியாசத்தில் ஆட்சியைப் பிடிக்க இயலவில்லை என்றாலும், ஆர்ஜேடி, மாநிலத்தின் தனிப்பெரும் கட்சியாகவும், அதிக வாக்குகளைப் பெற்ற கட்சியாகவும் வந்துள்ளது. லாலு பிரசாத் தேர்தல் பிரச்சாரத்திற்கே வராத சூழலில், தேஜஸ்வி யாதவின் பிரச்சாரத்தில், அக்கட்சிக்கு 75 சட்டமன்ற இடங்கள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வானால், தேர்தலில், வாக்குகளைப் பிரித்ததை தவிர, வேறு எந்த குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் ஏற்படுத்த இயலவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
எப்போது சிறை மீள்வோம் மற்றும் எதிர்காலத்தில் உடல்நிலை எப்படி ஒத்துழைக்கும்? என்பதைக் கணிக்க முடியாத நிலையில் இருக்கும் 72 வயது லாலு பிரசாத்திற்கு, தனது 30 வயதேயான இளைய மகன், பீகார் அரசியலில் பெரியளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டமை அதிக நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தரலாம்..!