வேலூர்: அமைச்சர் துரை முருகன் உறவினர் வீட்டு மாடியில் ஏறி குதித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில், கட்டுக்கட்டாக லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர் தொகுதியில் அமைச்சர் துரைமுருகனின் மகன், கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அங்கு ஓட்டு பணம் கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள அமைச்சர் துரைமுருகன் உறவினர் வீட்டுக்கு தேர்தல் அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள சென்றனர். ஆனால், அந்த வீடு வெளியே பூட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அருகே உள்ள வீட்டின் மாடியில் இருந்து, துரைமுருகன் உறவினர் வீட்டுக்குள் புகுந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். . அப்போது அங்கு கட்டுகட்டாக பணம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது, வீட்டினுள் சிலர் இருந்ததும் தெரிய வந்தது. அங்கிருந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே காங்குப்பம் கிராமத்தில் கட்டுகட்டாக பணத்தை பதுக்கி வைத்திருந்தவர் பெயர், நடராஜ் என்பதும், அவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் என்பதும் தெரிய வந்ததுள்ளது. இவர் ர் அமைச்சர் துரை முருகனின் உறவினர் மட்டுமின்றி, அந்த பகுதியில், வட்டிக்கு பணம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், காங்குப்பம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக நடராஜன் வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, 20க்கும் மேற்பட்ட தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நடராஜ் வீட்டுக்கு ஆய்வு செய்ய சென்றபோது, வீடு வெளியே பூட்டப்பட்டிருந்த நிலையில், அரை மணி நேரமாக கதவை தட்டியபோதும் யாரும் திறக்காததால், அருகில் இருந்த வீட்டின் மாடி வழியாக, நடராஜனின் வீட்டில் ஏறி குதித்தனர்.
அப்போது, மொட்டை மாடியில் கட்டுக் கட்டாக சிதறிக் கிடந்த இரண்டரை லட்சம் ரூபாயை கைப்பற்றினர். இதையடுத்து, மொட்டைமாடியின் கதவை உடைத்த அதிகாரிகள், வீட்டுக்குள் இறங்கியதைக் கண்டு, நடராஜனின் மனைவி கூச்சலிட்டு வாக்குவாதம் செய்தார். பின்னர், வீட்டை முழுமையாக சோதனையிட்ட அதிகாரிகள், பீரோவில் இருந்த 5 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மொத்தமாக ஏழரை லட்சம் ரூபாயை கைப்பற்றிய அதிகாரிகள், பணப்பட்டுவாடா நடைபெற்றதா என விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.