விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட சூறாவளியுடன் கூடிய கனமழை யால் ஏற்பட்ட வெள்ளத்தால்விழுப்புரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மழை வெள்ளத்தால் பல ஏரிகள் உடைந்து, சாலைகளில் வெள்ளம் பாய்ந்தோடும் நிலையில், பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன. ரயில்வே தண்டவாளம் மழைநீரால் மூழ்கி உள்ளதால், – தென்மாவட்ட ரயில்கள் பாதியிலே நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் பயணிகளி அவதியடைந்து உள்ளனர்.
இந்த நிலையில், ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ள ரயில்களில் உள்ள பணிகளை அழைத்து சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம் பகுதியில் மட்டும் அதிகபட்சமாக 37 செ.மீ. அளவிற்கு மழை கொட்டித்தீர்த்தது. இதனால் திண்டிவனம் பழைய பஸ் நிலையத்தை யொட்டியுள்ள ஏரியில் உடைப்பு ஏற்பட்டு மழை நீர் வெள்ளம் போல் கரை புரண்டோடியது. இதில் பஸ் நிலையத்தையொட்டி,கிடங்கல் பகுதிக்கு செல்லும் தரைப்பாலம் அடியோடு அடித்து செல்லப்பட்டது. வெள்ள நீர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் கரைபுரண்டோடியதால், பஸ் நிலையத்திற்கு பஸ்கள் உள்ளே வரமுடியாத நிலை ஏற்பட்டது. ரயில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் ரயில்கள் பாதியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்
விழுப்புரம் மாவட்டம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பு எதிரொலியாக சென்னை எழும்பூர்-திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று(டிச.02) ரத்து செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் பயணிகள் ரயில், புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் ரயில் ரத்தாகியுள்ளது. தென் மாவட்டத்தில் இருந்து சென்னை செல்லும் 5 விரைவு ரயில்கள் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தாங்கள் சென்னை செல்ல மாற்று ஏற்பாடு செய்து தரும்படி கோரிக்கை விடுத்தனர்.
இது அமைச்சர் சிவசங்கர் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், விழுப்புரம் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பயணிகளை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாம்பழப்பட்டு, திருக்கோவிலூர் பகுதிகளில் இருந்தும் பயணிகளை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
விக்கிரவாண்டி- முண்டியம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே பாலத்தில் அபாய அளவை தாண்டி தண்ணீர் செல்வதால், சென்னை- தென் மாவட்டங்களுக்கு இடையிலான 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் 5 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீரால் சூழப்பட்டு காட்சியளிக்கின்றன. நகரின் விரிவாக்கப் பகுதிகளும் தண்ணீரால் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.