காகஸ்நகர், தெலுங்கானா
தெலுங்கானா மாநிலத்தில் கும்பலால் தாக்கப்பட்ட பெண் வனத்துறை அதிகாரி அனிதா மீது வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ளது.
கடந்த மாதம் தெலுங்கானா மாநிலம் சிர்பூர் மாவட்டத்தில் உள்ள சர்சலா என்னும் சிற்றூரில் மரம் நடு விழா ஒன்று நடந்தது. அதில் பெண் வனத்துறை அதிகாரி அனிதா கலந்துக் கொண்டு மரக்கன்றுகளை நட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் கொனேரு கிருஷ்ணா தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே கிருஷ்ணா அனிதாவை தாக்க முற்பட்டார்.
தாக்குதலுக்கு பயந்த அனிதா ஒரு டிராக்டரின் மீது ஏறிக் கொண்டார். ஆயினும் வந்த கும்பல் அவரை கழிகளால் தாக்கியது. இதை ஒட்டி காவல்துறை கிருஷ்ணாவையும் மற்றும் சிலரையும் கைது செய்து வழக்கு பதியப்பட்டுள்ளது. இவர் சிர்பூர் தொகுதி தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் கோனேரு கோனப்பாவின் சகோதரர் ஆவார் தமக்கு ஆபத்து இருப்பதாக அனிதா கூறியதை ஒட்டி அவருக்கு பாதுகாப்பு அளிக்கபட்டுள்ளது.
இந்நிலையில் சர்சலா கிராமத்தில் வசிக்கும் தலித் இனத்தை சேர்ந்த நயினி சரோஜா என்னும் பெண் அனிதா மற்றும் வனத்துறை ஊழியர்கள் தன்னை சாதிப் பெயரை சொல்லி திட்டியதாக புகார் அளித்துள்ளார். அதை ஒட்டி அனிதா மற்றும் 15 பேர் மீது காகஸ்நகர் காவல் நிலைத்தில் தலித் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை எதிர்ப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய பட்டுள்ளது.