திருமலை: பிரபலமான திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் விநியோகத்தை தேவஸ்தானம் தனியார் வசம் ஒப்படைத்து உள்ளது.
திருப்பதி என்றாலே நினைவுக்கு வருவது மொட்டையும், லட்டுவும்தான். ஏழுமலையானை தரிசிக்க வருபவர்கள், சுவைமிகு லட்டுக்களை வாங்காமல் செல்வது கிடையாது. இதனால் லட்டின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததுடன், தயாரிப்பும், விநியோகம் செய்வதற்கும் ஏராளமான பணியாளர்கள் தேவைப்பட்டனர். இதுவரை, பக்தர்களுக்கு லட்டுக்களை விநியோகம் செய்யும் பணியை வங்கி ஊழியர்கள் மற்றும் ஸ்ரீவாரி சேவா உறுப்பினர்கள் இணைந்து செய்து வந்தனர்.
இந்த நிலையில் லட்டு விநியோகத்தை தனியார் வசம் ஒப்படைக்க தேவஸ்தானம் முடிவு செய்து டெண்டர் கோரியது. இதில், கலந்துகொண்ட பெங்களூரு கேவிஎம் இன்ஃபோ எனும் தனியார் நிறுவனம் டெண்டர் பெற்றுள்ளது. அதையடுத்து அந்நிறுவன ஊழியர்கள் லட்டு விநியோகத்தை கையாள உள்ளனர். திருப்பதியில் மொத்தம் 164 இடங்களில் லட்டு விநியோகம் செய்யும் பணியில் அந்நிறுவன ஊழியர்களை ஈடுபடுத்த தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது