ராய்ப்பூர்

ராய்ப்பூர் அருகே போலி ஸ்டேட் வங்கி நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

சபோரா என்னும் சிற்றூர் சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரின் 250 கி.மீ தொலைவில் உள்ளது. மர்ம நபர்கள் சிலர், கட்டடம் ஒன்றை, இங்கு 7 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து ஸ்டேட் வங்கிக் கிளை என பெயர் பலகை வைத்தனர். ஊரில் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக உண்மையான வங்கி போல், மேஜை, நாற்காலிகள், கண்ணாடி கூண்டுகள் வாங்கி வைத்தனர்.

வங்கியில் வேலைக்கு ஆள் எடுப்பதாக கூறி, ஏழைகள், வேலை இல்லாதவர்களை குறிவைத்து ரூ.30 ஆயிரம் சம்பளம் என ஆசை காட்டி அவர்களிடம் லட்சக் கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு வேலைக்கான ஆர்டரை வழங்கி உள்ளனர்.  எந்த ஒரு சந்தேகமும் வராதபடி அச்சு அசல், உண்மையான எஸ்.பி.ஐ., வங்கி வழங்கும் உத்தரவை போல் கொடுத்துள்ளனர்.

இது அரசு வேலை என்பதால் பலர் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் பணம் கொடுத்து உள்ளனர்.  மேலும் வங்கியில் அப்பகுதி மக்கள் வரவு, செலவு வைக்க துவங்கி உள்ளனர். இந் நகரில் இருந்து சற்று தொலைவில் உள்ள தாப்ரா நகரில் செயல்படும் எஸ்.பி.ஐ., கிளையில் கணக்கு வைத்துள்ளவருக்கு போலி வங்கி மீது சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. அங்கு சென்று விசாரித்துள்ளார்.

ஆனால் ஊழியர்கள் சரியான பதிலை அளிக்கவில்லை. என்வே இந்த கிளை குறித்து தனது கணக்கு வைத்துள்ள வங்கி மேலாளரிடம் தகவல் கொடுத்து. அவர்,காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதையொட்டி, எஸ்.பி.ஐ., அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய நிலையில்  மோசடியாளர்கள் பணத்துடன் தலைமறைவாகிவிட்டனர்.  காவல்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.