சென்னை
சென்னை ஆர் கே நகர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த தொழிலாளி மரணம அடைந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு சென்னை புளியந்தோப்பு திரு.வி.க.நகர் 7-வது தெருவை சேர்ந்த ராஜன் (வயது 42). இவர் ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த நிலையில், காவல்துறையினர் தனது புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறி காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி உடலில் தீ வைத்துக்கொண்டார்.
இதனால் பலத்த தீக்காயம் அடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். காவல்துறையினர் இதுகுறித்து நடத்திய விசாரணையில், தீக்குளித்த ராஜனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், அவர் கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகரில் சொந்தமாக இரும்பு பட்டறை நடத்தி வந்தது தெரியவந்தது.
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அங்குள்ள கம்பெனியில் கூலி வேலை செய்து வந்த நிலையில், அங்கு பணிபுரிந்து வரும் மாதவன் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே மாதவன் மற்றும் அவரது நண்பர் அருண்குமார் ஆகியோர் சேர்ந்து ராஜனை தாக்கியதாக கூறப்படுகிறது. ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் இது குறித்து, புகார் கொடுக்க ராஜன் வந்த நிலையில், காவல்துறையினர் நடந்தவற்றை புகாராக எழுதிக்கொடுக்குமாறு கூறி திருப்பி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
வேதனையடைந்த ராஜன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளி ராஜனை தாக்கியதாக அளித்த புகாரின் பேரில், கொருக்குப்பேட்டை ரயில்வே காலனி சி.பி.ரோட்டை சேர்ந்த அருண்குமார் (26) என்பவரை கைது செய்து நடவடிககை எடுத்து தலைமறைவான மாதவனை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆர் கே நகர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற ராஜன் ஜார்ஜ் டவுன் 15-வது நீதிமன்ற நடுவர் பிரான்சிஸ் சாமுவேல் ராஜனிடம் மரண வாக்குமூலம் அளித்தார். ராஜன் நேற்று மாலை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணம் அடைந்துள்ளார்.