தாராபுரம்: தாராபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ள, பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன், ஏற்கனவே ஒப்புதல் அளித்தபடி, மத்திய வேளாண் சட்டங்கள் குறித்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்துக்கு வராமல் புறக்கணித்தது, விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மோடி அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 100நாட்களை கடந்து தொடர்ந்துவருகிறது. இந்த நிலையில், தாராபுரம் தனித்தொகுதி யில் மாநில பாஜக தலைவர் எல்.முருகனிடம் மத்திய வேளாண் சட்டங்கள் விவாதிக்க விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்தனர். அதற்கு எல்.முருகனும் ஒப்புதல் வழங்கியிருந்தார்.
அதைத்தொடர்ந்து, தாராபுரம் தொப்பம்பட்டியில் விவசாயிகளுடனான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கலந்துரையாடலின்போது, விவசாய நிலங்ஙகளில் அமைக்கப்படும் உயர்மின் கோபுரம், 8 வழிச்சாலை உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்க விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஒப்புதல் வழங்கிவிட்டு, தற்போது புறக்கணித்ததால் வேட்பாளர் முருகன் மீது விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். மதியம் 2 மணி வரை விவசாயிகள் காத்திருந்தும் எல்.முருகன் வராததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆனால், எல்.முருகன் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மதுரை பொதுக்கூட்டத்துக்கு சென்றுவிட்டதால் விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை என்று பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.