தயாரிப்பாளர் ஐசரி K கணேஷ் தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கிய ஆளுமைகள் பங்கேற்கும் ஒரு முக்கிய படைப்பை அடுத்ததாக தயாரிக்கிறார்.

“குட்டி லவ் ஸ்டோரி” எனும் தலைப்பிலான ஆந்தாலஜி வகை திரைப்படத்தை இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், வெங்கட் பிரபு, விஜய் மற்றும் நலன் குமாரசாமி இணைந்து இயக்குகிறார்கள்.

இந்தப் படம் தொடர்பாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியிருப்பதாவது:

“எல்லோர் மனதிலும் எக்காலத்திலும் நீங்காது இடம்பிடித்திருப்பது காதல் கதைகள்தான். அப்படியான ஒரு காதல் கதையைத் தயாரிக்க வேண்டுமென மிக நீண்ட காலமாக நினைத்திருந்தேன். அந்த வகையில் மிக அழகானதொரு தயாரிப்பாக இந்தப் படம் அமைந்திருப்பது மனதிற்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.

ஒரு ரசிகனாக இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோரின் படங்கள் எந்த வகை ஜானராக இருந்தாலும் அதில் வெளிப்படும் கவிதைத் தன்மையையும், காட்சித் தொகுப்பையும், மிளிரும் உணர்வுக் குவியல்களையும் ரசித்திருக்கிறேன்.

இவர்களுடன் இணைந்து இப்படைப்பில் பங்கேற்பதை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். படத்தின் இறுதி வடிவத்தை வெகு ஆவலுடன் காத்திருக்கிறேன். மிக விரைவில் படத்தில் பங்கேற்கும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குழுவை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளோம்”.

இவ்வாறு ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.