குற்றம் கடிதல்: 9
அண்ணல் காந்தி அடிகள் ஒரு முறை தன் செயலர் மகாதேவ் தேசாயுடன் நடந்து போய்க் கொண்டிருந்தார். அண்ணல் கையில் வைத்திருந்த கைப்பையில் கொஞ்சம் பணமும் இருந்திருக்கிறது. அப்போது பிச்சைக்காரர் போன்ற தோற்றத்தில் இருந்த ஒரு நபர் அண்ணலின் கையிலிருந்த பையைப் பறித்துக்கொண்டு ஓடியிருக்கிறார். உடனே அவரைப் பிடிக்கப் பாய்ந்த மகாதேவ் தேசாயை அண்ணல் காந்தி தடுத்துவிட்டாராம்.
சில காலம் கழித்து ஒரு பொது நிகழ்ச்சியில் அண்ணல் காந்தி கலந்து கொண்டபோது, தன்னிடம் கையெழுத்து கேட்பவர்களிடம் காங்கிரஸ் வளர்ச்சி நிதிக்காக ஒரு ரூபாய் கொடுத்தால் கையெழுத்துப் போடுகிறேன் என்று கூறி நிதி வசூல் செய்துள்ளார்.
அதை ஒரு பையில் வைத்து எடுத்துச் செல்லும்போது அந்தப் பையை ஒரு திருடன் பறித்துக்கொண்டு ஓடியிருக்கிறான். உடனே முகம் சிவந்த அண்ணல் அருகில் இருந்த மகாதேவ் தேசாய் மற்றும் தோழர்களிடம், ’என்ன வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். அந்த நபரை விரட்டிப் பிடியுங்கள்’ என்று ஆக்ரோஷமாகக் கூறியிருக்கிறார். உடனடியாக அந்த நபரை விரட்டிச் சென்று களவு போன பணத்தை மீட்டுள்ளனர்.
அப்போது மகாதேவ் தேசாய் அண்ணலிடம் கேட்டிருக்கிறார் ‘அன்று ஒருவன் உங்களிடம் பணத்தைப் பறித்தபோது அவனை விட்டு விடும்படி கூறினீர்கள். இன்று இன்னொருவன் உங்கள் பணத்தைப் பறித்தபோது கோபப்படுகிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு?’ என்று கேட்டாராம்.
அதற்கு ‘அன்று பறிக்கப்பட்டது என் சொந்தப் பணம். அதைப் பறித்துச் சென்றவன் பசியால் பறித்துச் சென்றான். அந்தக் குற்றத்தில் சமூகத்துக்கும் பங்கிருக்கிறது. அவன் அது போன்ற குற்றச் செயல்களில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகளை நாம் ஏராளமாக உருவாக்க முடியும். இன்று பறிக்கப்பட்ட பணம் என் பணம் அல்ல. இந்த நாட்டு விடுதலைக்காக மக்கள் கொடுத்த பணம். ஒவ்வொரு காசும் மக்களுடையது. அதை ஒருவன் பறிப்பது கடுங்குற்றமாகும்’ என்றாராம். (இந் நிகழ்வினை என் நினைவுகளில் இருந்து எழுதுகிறேன். அதனால் அதன் துல்லியத்தன்மையில் மாறுபாடு இருக்கலாம். ஆனால் சாரத்தில் மாற்றமில்லை.)
குற்றம் என்பது ஒற்றைத்தன்மை கொண்டதல்ல. அதேபோல தண்டனை என்பதும் குற்றத்தின் தன்மைக்கேற்ற மீட்புக் காலம்தான். இன்னும் சொல்லப் போனால் குற்றத்தின் தன்மையை உணர்ந்து மீள்வதற்கான காலமே தண்டனைக் காலமாகும்.
அதிலும் சிறார்கள் குற்றங்களில் விழும்போது தனிக் கவனம் தேவையாகிறது. சிறார் குற்றவாளிகள் என்பவர்கள் 18 வயது நிறைவடையாதவர்கள். குறிப்பாகப் பதின்பருவ வயதினரே அதிக சிறார் குற்றவாளிகளாகக் காணப்படுகிறார்கள். மனிதனின் வாழ்வில் அதிலும் இந்த நவீன காலத்தில் பதின்பருவ வயது முக்கியமானதாகப் படுகிறது.
இன்று உலகின் தலையாய பிரச்சனைகளைப் பட்டியலிட்டால் பதின்பருவ வயதினர் சந்திக்கும் சிக்கல்களுக்கு முக்கிய இடம் அளிக்கப்படலாம். கடுமையான உளவியல் சிக்கல்களுக்கு ஆளாகிறவர்களாகப் பதின்பருவ வயதினர் உள்ளனர். இன்று இளம் சிறார் குற்றவாளிகள் அதிகரிப்பதற்கும் பதின்பருவ வயதினர் சந்திக்கும் சமூகச் சிக்கல்களுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை உளவியலாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
வறுமை காரணமாக, பெற்றோரின் கவனிப்பின்மை காரணமாக, சமூகப் புறக்கணிப்பு காரணமாக வழி தவறுகிறவர்களே சிறார் குற்றவாளிகள். அதனால்தான் குற்றம் நிரூபிக்கப்பட்ட சிறார்கள் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள். அதனால்தான் சிறார் குற்றவாளிகள் சிறைத்துறையிடம் ஒப்படைக்கப்படாமல் சமூக நலத் துறையிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.
அங்கு அவர்கள் குற்றச் சூழல்களில் இருந்து விடுபட்டு சமூகக் கல்வி பெற்று ஆரோக்கியமான உள்ளமும் உடலும் கொண்டு வெளியே வர வேண்டும் என்பதே சிறார் குற்றவாளிக்கான நீதியாகக் கூறப்படுகிறது.
ஆனால், தமிழகத்தின் சிறார் கூர்நோக்கு இல்லங்கள் எவ்வாறு நடைபெறுகிறது. அவர்கள் குழந்தை மனம் கொண்டவர்கள் என்பதை அங்குள்ள யாருமே அங்கீகரிப்பதில்லை. அவர்கள் செய்த குற்றங்கள் அவர்கள் அறியாமல் செய்தவை என்பதை அதிகாரிகள் யாருமே நம்புவதில்லை. போதுமான தங்குமிடமில்லை. மேலும், சிறார் கூர்நோக்கு இல்லங்கள் சிறைக் கொட்டடிகளை விட மோசமாக உள்ளன. சிறார் குற்றவாளிகளை அடிப்பதும் சித்திரவதை செய்வதும் நடக்கிறது. அங்கு அவர்களுக்கு ஆரோக்கியமான கல்வி அளிக்கப்படுவதில்லை. சமூகம் பற்றிய போதம் இல்லை. வெளியே சென்றால் குற்றம் செய்யாமல் வாழ முடியும் என்ற நம்பிக்கையும் அளிக்கப்படுவதில்லை.
பொதுவாக கூர்நோக்கு இல்லங்களில் கடும் இட நெருக்கடி உள்ளது. இரண்டாவது, சிறார்களை அவர்களின் வயதைப் பொறுத்து தனியாகப் பிரித்து வைக்கப்பட வேண்டும். குறைந்தது இரு பிரிவுகளாகவாவது பிரித்துப் பராமரிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அடுத்ததாக தண்டனைக் காலம் முழுவதும் சிறார்கள் உண்பதும் வேலைகள், விளையாட்டுகள் ஏதுமின்றி முடங்கிக் கிடப்பதும் தவிர வேறு ஏதும் கிடையாது. மூளையை மழுக்கடிப்பதற்கு வேறு என்ன வேண்டும்? விளையாடுவதற்குக் கூட வாய்ப்பு கிடையாது. அவரவர் வயதுக்கேற்ப அவரவர் விருப்பம் மற்றும் திறமைக்கேற்ப தொழில்களைக் கற்றுத் தருவதில்லை.
அதனால்தான் அண்மையில் 30க்கும் அதிகமான சிறார் குற்றவாளிகள் தப்பிச் சென்ற சென்னை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்ட 14 வயதேயான சிறுவன் “இதைவிடப் பெரிய சிறைக்குச் செல்வதே எனது கனவு’ என்று கூறுகிறான். புழல் சிறைக்குச் செல்வது இதைவிட பெரிய சாதனை என்ற எண்ணத்தைத்தான் சிறார் சீர்திருத்தக் கல்வி கற்றுத் தருகிறதா? என்ற கேள்வி எழுகிறது.
சென்னை கூர்நோக்கு இல்லம் கடந்த ஐந்தாண்டுகளில் ஏழு முறைக்கு மேல் சிறார் குற்றவாளிகளைத் தப்பிக்க வைத்து சாதனை படைத்துள்ளது. இதுபோன்ற பல கூர்நோக்கு இல்லங்களிலும் இது தொடர்கதையாகிறது. இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாகவே இது தொடர்ந்து கொண்டிருக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது அருகில் இருந்த தட்டப்பாறை சிறார் சீர்திருத்தப்பள்ளியில் இருந்து தப்பிய சிறுவனைப் பிடித்து கால்களிலும் கைகளிலும் விலங்கிட்டு அழைத்துச் சென்றதைச் சக சிறுவனாகக் கண்ட காட்சி இன்னமும் என் நெஞ்சை விட்டு அகலவில்லை.
சென்னை கூர்நோக்கு இல்லத்தின் குறைபாடுகள் குறித்து பல ஆண்டுகளாகப் புகார் கூறப்பட்டும் சீர்திருத்தம் செய்யப்படவில்லை என்பதே சிறார் கூர்நோக்கு இல்லங்களுக்கான குழுவின் முன்னாள், இன்னாள் உறுப்பினர்களின் குறைபாடாக இருக்கிறது. முக்கியமாக, தண்டனைக் காலத்தில் சிறார்களுக்குப் போதுமான மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டும், சமூகக் கல்வியும், தொழிலும் கற்றுத் தரப்பட வேண்டும்.
குறிப்பாக விடுதலையான (?!) பின்னரும் கல்வியைத் தொடர விரும்பும் சிறார்களுக்கு அந்த வாய்ப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும், முக்கியமாக சிறார் குற்றவாளிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் மிகவும் பின்தங்கிய சமூக, பொருளாதார சூழ்நிலையைக் கொண்டவர்களாக இருப்பதால் தண்டனை முடிந்து வெளியே வரும் சிறாரை அவர்களின் பெற்றோரே ஏற்றுக்கொள்ள விரும்பாத சூழ்நிலையும் உள்ளது. அதனால் அவர்கள் நேரடியாக சமூக விரோதிகளிடம் அடைக்கலமாக வேண்டிய சூழலும் நிலவுகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இதெல்லாம் யார் காதிலும் ஏறுவதில்லை.
அநேகமாக, சென்னை கூர் நோக்கு இல்லத்திலிருந்து தப்பிச் சென்ற அல்லது வெளியேறிய சிறார்கள் அனைவரையும் மீண்டும் பிடித்து வேறிடத்தில் அடைப்பதோடு இப் பிரச்சனை தீர்க்கப்பட்டு விட்டதாக சமூக நலத்துறை நினைக்கலாம். ஆனால், அது புதிய தொடக்கமாகவும் அமைய வேண்டும்.
ஏனெனில் குழந்தைகள் மனதில் படியும் வன்மம் அபாயகரமானது. குற்றம் நிரூபிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ள சிறார்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் மிகவும் பின் தங்கிய சமூக, பொருளாதாரச் சூழ்நிலை காரணமாகத் தாம் குற்றவற்றவர் என்பதை நிரூபிக்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களாகவும் நிரபராதிகளாகவும் இருக்கலாம். அப்படியானால் இந்தச் சமூகம் கொடூரமானது. அண்ணல் காந்தியின் ஆத்மா அவர்களை ஒருபோதும் மன்னிக்காது.