குற்றம் கடிதல்: 5
 

ராம்குமார் - சுவாதி
ராம்குமார் – சுவாதி

சுவாதி கொலைவழக்கில் ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயதான ராம்குமார் பொறியியல் பட்டதாரி. திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரம் ஊரைச் சேர்ந்தவர். வேலை தேடி சென்னை வந்து நுங்கம்பாக்கம் ரயில்நிலையம் அருகில் சூளைமேட்டிலுள்ள ஒரு மேன்சனில் தங்கி வேலை தேடியுள்ளார். அப்போது இன்போஸிஸ் ஐ.டி நிறுவன ஊழியரான சுவாதிவைப் பார்த்துள்ளார். பல நாள் அவரைப் பின்தொடர்ந்து அவருடன் பழக முயற்சி செய்துள்ளார். சுவாதி அவருடன் பழக மறுத்துள்ளதால் அவரை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்துக் கழுத்தை வெட்டிக் கொலை செய்துள்ளார்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் உயிரற்ற சுவாதி
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் உயிரற்ற சுவாதி

அதன் பிறகு தனது ஊருக்குச் சென்று தனது வீட்டில் மறைந்திருந்துள்ளார். தனிப்படை போலிசார் புலன்விசாரணை மூலம் இதனை அறிந்து அவரைக் கைது செய்ய முயலும்போது கூர்மையான ஆயுதத்தால் தனது கழுத்தை அறுத்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அவரைக் காப்பாற்றிய போலிசார் தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு அறுவைசிகிச்சை நடந்து தீவிர கண்காணிப்பு வார்டில் சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் அவர் சென்னை கொண்டு வந்து விசாரிக்கப்படுவார் என்று சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
உண்மையில் வீடியோ பதிவில் காணப்பட்ட ஒரு உருவத்தை மட்டும் வைத்துக் கொலையாளியைப் பிடித்துள்ளனர். சுவாதி குடும்பத்தினர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்ததாகக் காவல்துறை கூறினாலும் கொலையாளியை அடையாளம் காணக்கூடிய எந்தத் தகவலும் அவர்களிடமிருந்து வந்ததாகத் தெரியவில்லை. இந்தக் கொலை வழக்கில் நேரடி சாட்சியங்களோ வாக்குமூலங்களோ எதுவும் இல்லை. இந்த நிலையில் காவல்துறையினர் கொலையாளியைச் சுற்றி வளைத்தது பாராட்டுக்குரியதுதான்.
ராம்குமார் (கழுத்தறுபட்ட நிலையில்)
ராம்குமார் (கழுத்தறுபட்ட நிலையில்)

கொலையாளி என்று அடையாளம் கண்டுள்ள ராம்குமாரிடம் மேலும் விசாரணை செய்து குற்றத்தை நிரூபித்து அவருக்கு உரிய தண்டனையை விரைவில் பெற்றுத் தருவார்கள் என்று நம்புவோம்.
ஆனால் ஒரு தலைக் காதலை ஏற்காததால் கொலை, ஆசிட் வீச்சு போன்ற நிகழ்வுகளும், மார்ஃபிங் மூலம் இணையத்தளத்தில் இழிவு செய்வதும் தொடர் நிகழ்வுகளாக இருக்கின்றன. அதேபோல சாதி மறுப்புக் காதல் திருமணம் செய்தால் கொடூரமான முறையில் ஆணவக் கொலைகளும் தொடர்கின்றன. அல்லது இருவரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் எனில் கொலை செய்யப்படுகின்றனர்.
இவற்றை வெறும் குற்ற நிகழ்வுகளாக மட்டும் கருத முடியாது. பெண்ணை வெறும் உடலாகப் பார்க்கும் ஆணாதிக்க வெறியும், ஆதிக்க சாதி வெறியும் பின்புலமாகச் செயல்படும் இக் குற்றச் செயல்களை ஏன் நாம் சமூகப் பிரச்சனையாகப் பார்க்க மறுக்கிறோம். இதற்கு எதிரான குரல்கள் சமூகத்தில் மிகவும் பலவீனமாகவே ஒலிக்கின்றன.
 
ஓவியம்: தமிழ்
ஓவியம்: தமிழ்

அதனால்தான் சுவாதி ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டபோது அவளைக் காப்பாற்ற யாரும் முன் வரவில்லை. பக்கத்தில் வந்து தடுக்கக் கூட வேண்டாம். தூரத்தில் இருந்து ஒரு பத்துப்பேர் குரல் கொடுத்திருந்தால் கூட கொலையாளியின் கவனம் திசை மாறி சுவாதி தப்பிப்பதற்கு வழி கிடைத்திருக்கலாம்.
ஆனால் யாரும் அசையவில்லை. இதன் பின்னணியில் செயல்பட்ட மனநிலையின் நீட்சிதான் சுவாதியைக் கொன்றவன் இஸ்லாம் மார்க்கத்தைச் சேர்ந்தவன் என்ற விஷத்தைப் பரப்பத் தூண்டியது. அது காவிக்கும்பல். ஆர்.எஸ்.எஸ். ஸின் சங்கப் பரிவாரங்கள் எப்போதும் கொலைவெறி மனநிலையுடன் அலைபவர்கள்.
காவல்துறை கொலையாளியை அடையாளம் காண்பதற்கு முன்பே அவர்கள் பிலால் மாலிக்தான் கொலையாளி என்றனர். சமூக வலைத்தளங்களில் தமிழ்நாட்டின் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் மதிப்பு பெற்ற திரைப்பட, நாடக நடிகர்கள் ஒய். ஜி. மகேந்திரன், எஸ்.வி. சேகர் போன்றவர்களும் அவசர அவசரமாகச் சமூக வலைத்தளத்தில் பிலால் மாலிக் கொலையாளி என்றனர்.
ஒய்.ஜி. மகேந்திரன்
ஒய்.ஜி. மகேந்திரன்

இதன் மூலம் மதக் கலவரத்தைத் தூண்டுவதுதான் அவர்கள் நோக்கம். அல்லது அதற்கான பூமியாகத் தமிழ்நாட்டு மண்ணைப் பக்குவப்படுத்துவது அவர்கள் நோக்கம். ஆனால், இவ்வாறு சமூக நல்லிணக்கத்துக்கு எதிராக, உண்மைக்குப் புறம்பான வதந்திகளைப் பரவ விட்டவர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமூக வலைத் தளங்களில் மட்டும் கடுமையான கண்டனக் குரல் வெளிப்பட்டது.
ஆனால் சுவாதியைக் கொலை செய்தது மாலிக் இல்லை; ராம் குமார் ! ஆனால் அதன் பிறகும் இந்தக் காவிக்கும்பல் தவறைத் திருத்திக் கொள்ளவில்லை. இசுலாமியராக இல்லாவிட்டால் என்ன, அவர் தலித்! என்று ஆரம்பித்து விட்டனர். துரதிருஷ்டவசமாகக் கொலையாளி, ராம் குமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் பெருமளவில் மதமாற்றம் நடந்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார். உடனே, ’அவர் மதம் மாறிய இசுலாமியர். சலுகைகளுக்காக இந்துப் பெயர் வைத்துள்ளார்’ என்று எழுதத் தொடங்கிவிட்டனர்.
ராமின் பெயர் அப்துல்லாவாம். பாலுமகேந்திராவின் ராமன் அப்துல்லா படம் பார்த்திருப்பார்கள் போலும். அவர் ஜிகாத் என்றும் திட்டமிட்டே இந்து பிராமணப் பெண்ணை லவ் ஜிகாத்துக்காகக் காதலிக்க முயன்று தோற்றதால் கொலை செய்ததாகவும் தங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டுள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக ராமின் பெற்றோர்கள் கூட மதம் மாறவில்லை. அதனால் இக் கொலைக்கு மதம் காரணமல்ல என்பது தெளிவாகவே தெரிகிறது. லவ் ஜிகாத் என்பது கற்பனைதான். அப்படி ஒருவேளை நடந்திருந்தால் அது வேரோடு பூண்டறுக்க வேண்டிய ஓர் அம்சம்.
ஆனால் அவர்கள் தொடர்ந்து கூக்குரலிடுகிறார்கள். முதலில் கொலையாளி மாலிக் என்று கூறிய காவி கல்யாண ராமன் என்பவரே சமூக வலைத் தளத்தில் இவ்வாறு எழுதியுள்ளார்:
’சத்தியமாக இது ஒரு ஜிகாதி கொலை என்பதில் சந்தேகமில்லை… ஏன் என்ற காரணம் ஓரிரு நாட்களில் தெரியத்தான் போகிறது… எனக்குக் கிடைத்த தகவலின்படி அவன் ஏற்கனவே பிடிபட்டுவிட்டான் அல்லது போலீசுக்கு அவன் யாரென்று தெரியும்… ஆக, இந்தக் கொலையின் பின்னணியில் இருப்பதாக வரப் போவது என்னவோ ஒரு ஜிகாதியின் பெயர்தான்… ஏன் இந்தக் கொலை என்பதை போலீசார் சொல்லித்தான் ஆக வேண்டும்… பல்வேறு யூகங்கள் வந்து கொண்டு இருக்கின்றன… மக்கள் தங்கள் ஆதங்கத்தால் ஏதேதோ சொல்லத்தான் செய்வார்கள்…
வன்ம பதிவு
வன்ம பதிவு

இவரது மற்றொரு பதிவில் பின்னூட்டமிட்டுள்ள சுரேஷ் சுரேஷ் என்பவரும் இவ்வாறு எழுதியுள்ளனர்:
’ஸ்வாதி என்ற பிராமணப் பெண் கொடூரமாக பிலால் மாலிக் என்ற மிருகத்தால் வெட்டி கொல்லப்பட்டுள்ளார்; தமிழகத்தில் மயான அமைதி நிலவுகிறது குறிப்பிட்ட மதமா??? கொய்யால எதுடா அந்தக் குறிப்பிட்ட மதம்???? பிராமின் முதல் பெண்கள் துளுக்கனிடம் காதலில் விழுகிறார்கள் என்று சொல்வதை விட திட்டம் போட்டு 3+/-% பிராமின் வம்சத்தை அழிக்க முடிவு செய்துள்ளார்கள் என்பதே சரி..இதை நீண்ட காலத் திட்டமாகத் திட்டம் போட்டு டார்கெட் செய்து முடிக்கிறது இந்தக் கூட்டங்கள் ..முஸ்லிம், இஸ்லாமிய , கிறிஸ்துவ நரிகளுக்கு நன்றாகவே தெரியும் பிராமண வர்க்கத்தில் எதிர்ப்பு தெரிவிக்கவோ அல்லது அவர்களுக்கு ஆதரவு தரவோ யாரும் இல்லை, வரவும் மாட்டார்கள் என….’
அதேபோல சுரேஷ் குமார் என்பவரும் கே.வி.சிவராமன் ஐயர் என்பவரும் இவ்வாறு பின்னூட்டமிட்டுள்ளனர்:
’1984ம் ஆண்டு திருநெல்வேலி அருகே ஒரு கிராமமே இஸ்லாம் மதத்திற்கு மாறியது. அந்தக் கிராமத்தின் பெயர் மீனாட்சிபுரம். அந்த மீனாட்சிபுரத்தைச் சார்ந்தவன்தான் இந்த ராம்குமார் @ அப்துல்லா.
இவன் கலிமா சொல்லி இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டவன். சலுகைக்காகத் தனது பெயரை மாற்றாமல் உள்ளான்.
இவன் யார் ? இவன் நண்பர்கள் யார் ? இவன் நடவடிக்கைகள் பற்றி மீனாட்சிபுரத்தில் சென்று விசாரிக்காத வரை உண்மை உலகிற்குத் தெரிய வராது.’
அப்படியா… எது  உண்மையோ தெரியவில்லை. உண்மையான கொலைகாரன் யாராக இருந்தாலும் பிடிபட்டால் மகிழ்ச்சியே.
ராஜேந்திரன் ப்ரஸ்மீட்
ராஜேந்திரன் ப்ரஸ்மீட்

இதுபோன்ற கருத்துகளை அரசும் காவல்துறையும் எவ்வாறு சகித்துக் கொள்கிறது. சென்னை ஆணையர் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் இதனை அவரது கவனத்துக்குக் கொண்டுவந்தபோது ஆணையர் புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தார். ஊடகங்களும் அதோடு வாயைப் பொத்திக் கொண்டன.
அது மட்டுமல்ல, சமூக ஊடகங்களில் தீவிரமாகச் செயல்படும் உயர்சாதி முற்போக்காளர்களின் பக்கங்களைப் பார்த்ததில் ஒருவர் கூட இது குறித்துப் பதிவிடவோ எதிர்வினையாற்றவோ காணோம்.
என்ன ஆச்சு நமது கருத்து கந்தசாமிகளுக்கு! ?