புரிந்து கொள்ள முடியாத புத்தரின் புன்னகை ! : அப்பணசாமி

Must read

குற்றம்கடிதல்: 14
ந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநாட்டுவதில் நாடாளு மன்றத்தின் மாநிலங்களைவைக்கு அத்தியாவசியப் பங்கு உண்டு. ஆங்கிலத்தில் அப்பர் ஹவுஸ் என்றும் இந்தியில் ராஜ்யசபா என்றும் அழைக்கப்பட்டாலும் தமிழில் அழைக்கப்படும் மாநிலங்களவை என்பதே அதற்குப் பொருத்தமான பெயர்.

பாராளுமன்றம்
பாராளுமன்றம்

மக்களவை உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவ்வாறு தேர்ந்தடுக்கப்படும் உறுப்பினர்கள் அரசியல் கட்சிகள் ரீதியாகச் செயல்படுபவர்கள். பெரும்பாலும் தேசியக்கட்சிகள் ஆதிக்கம் மட்டுமே அதிகமாக இருந்த அக்காலத்தில் அதன் பிரதிநிதித்துவம் குறித்த விவாதத்தைத் தொடர்ந்துதான் மாநிலங்களைப் பிரதிபலிக்கும் ஒரு மேல் சபையை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் மாநிலங்களவைக்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பெரும்பாலும் மக்கள் மத்தியில் அதிகம் அறிமுகமில்லாத பரவலாக அறியப்படாத பல துறை அறிஞர்களே மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர்.
அண்ணா
அண்ணா

இதனால், மாநிலங்களவையை அறிவோர்கள் அவை என்று அழைத்து வந்தனர். தமிழகத்தில் இருந்து அறிஞர் அண்ணா, இரா.செழியன், முரசொலி மாறன், வைகோ, ஏ.நல்லசிவன் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆரோக்கியமான விவாதங்களில் ஈடுபட்டனர்.
இரா. செழியன்
இரா. செழியன்

குறிப்பாக, தமிழ்நாடு பெயர் மாற்றம் குறித்து மாநிலங்களவையில் அண்ணா ஆற்றிய உரையும் அதற்கு ஆளும் கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் மெய்மறந்து செவிசாய்த்த காட்சி போன்றவை வரலாற்றுச் சிறப்பு மிக்கவையாகும். குறிப்பாக மாநில சுயாட்சி குறித்தும், இந்தித் திணிப்பை எதிர்த்தும் மாநிலங்களவையில் ஆற்றிய உரைகள் குறிப்பிடத்தக்கவை.
வைகோ
வைகோ

பொதுவாக, மக்கள் நலனைப் பாதிக்கும் நிகழ்வுகள் நடைபெறும்போது ஆளும் கட்சியினர் மக்களவையைச் சந்திப்பதைவிட மாநிலங்களவையைச் சந்திப்பதற்கே அதிகத் தயக்கம் காட்டுவர். காரணம், மாநிலங்களவை உறுப்பினர்கள் புள்ளிவிவர ஆதாரங்களுடன் தங்கள் உரையால் ஆளும் கட்சியைத் துளைத்தெடுப்பார்கள்.
ஆனால், மாநிலங்களவையின் தரம் வர வர குறைந்து வருகிறது. காரணம் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் தரம்தாம்.
மக்களைச் சந்திக்க முடியாமல் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள், அரசுடன் சமரசம் செய்து கொள்ளும் பத்திரிகையாளர்கள், டெல்லியில் கட்சி வேலை செய்ய அனுப்பப்படுபவர்கள், ஆட்சி அதிகாரத்துக்கு மிக நெருக்கமான முதலாளிகள், திரைப்பட நடிகைகள், நடிகர்கள், பிரபலங்கள், புகழடைந்தவர்கள் ஆகியோரே அரசியல் கட்சிகளின் சார்பில் மாநிலங்களவைக்கு அனுப்பப்படுகிறார்கள். மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கடமையைத் தவிர மற்ற அனைத்து வேலைகளையும் அவர்கள் டெல்லியில் பார்க்கிறார்கள்.  மாநிலங்களவை கூடும் பல நாட்களில் உறுப்பினர்கள் இல்லாமல் அவை காற்றாடுகிறது.
அதனால்தான் மாநிலங்களவையே தேவையில்லை என்றும் ஒரு தரப்பு கோருகிறது. மாநிலங்களவையால் செலவுதான். மாநிலங்களவை சட்டங்கள் இயற்றுவதைத் தடுக்கிறது. 1973ல் மாநிலங்களவையை ஒழிக்கும் தீர்மானமே முன் மொழியப்பட்டது. ஆனால் இதனை நாடாளுமன்றம் ஏற்கவில்லை.
சிறந்த பார்லிமென்டேரியன் என்று அனைத்துத் தரப்பாலும் பாராட்டப்படுபவர் இரா.செழியன். மூன்று முறை மக்களவை உறுப்பினராகவும் ஒரு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் அவர் இருந்துள்ளார். அவர் மாநிலங்களவை குறித்து எழுதியுள்ள ஒரு கட்டுரையில் ’ஒரு ஜனநாயக நாட்டில் மாநிலங்களவை மிகவும் அவசியம், அது கூட்டாட்சித் தத்துவத்தைக் காக்கிறது. இங்கிலாந்தில் மேல்சபை, பிரபுக்கள் சபை என்றே அழைக்கபடுகிறது. சமூகத்தின் மேல் தட்டினைச் சேர்ந்தவர்களே அதிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் இந்தியாவில் மாநிலங்களை இந்த அவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதிகள் உள்ளனர். எனவே, மாநிலங்களவை அவசியம் என்று எழுதியுள்ளார்.
திருச்சி சிவா
திருச்சி சிவா

இரா.செழியன் போன்றவர்களை மாநிலங்களவைக்கு அனுப்பிய தமிழகம்தான் இன்று சசிகலா புஷ்பா போன்றவர்களை அனுப்பிக் கொண்டிருக்கிறது.
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் உச்சக்கட்டக் காட்சிதான் கடந்த சனி அன்று டெல்லி விமான நிலையத்தில் நடந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா பொதுமக்கள் மத்தியில் கன்னத்தில் அறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதலில் அதிமுக தலைவரை திருச்சி சிவா தரக்குறைவாகப் பேசியதால் அடித்தேன் என்று சசிகலா புஷ்பா கூறியதை அதிமுக தலைமையே ஏற்கவில்லை. இதனால் இச் சம்பவம் ஏதோ தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்ததாகச் சொல்லப்பட்டது.
சசிகலா புஷ்பா
சசிகலா புஷ்பா

தனிப்பட்ட காரணங்கள் என்னவாகவும் இருந்து விட்டுப் போகட்டும். அதற்காகப் பொது இடத்தில் அறிஞர்கள் அவையைச் சேர்ந்தவர்கள் இப்படியா நாகரிகமில்லாமல் நடந்து கொள்வார்கள். அது மட்டுமல்லாமல், திங்களன்று மாநிலங்களவை கூடியதும் சசிகலா புஷ்பா பேசியது மேலும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது. தான் சார்ந்த கட்சித்தலைமை மீதே குற்றம் சுமத்தினார். தன்னை எம்.பி பதவியை ராஜினாமா செய்யும்படி முதலமைச்சர் ஜெயலலிதா வற்புறுத்துவதாகவும் அவைக்கு வர விடாமல் தடுப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதற்கு என்ன காரணம்? மாற்றுக் கட்சி உறுப்பினர் மீது நாகரிகமில்லாமல் நடந்து கொண்டதற்காகவா என்றால் அது இல்லை. பின் என்ன காரணம்? கட்சியில் தனக்கு இருக்கும் அதிருப்தியை மறைக்கத்தான், டெல்லி விமான நிலையத்தில் அவர் அவ்வாறு நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
அதே சமயத்தில் சசிகலா புஷ்பா நடவடிக்கைக்கு திருச்சி சிவாவோ, திமுக நாடாளுமன்றக்குழு தலைவரோ திமுக தலைமையோ கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை. மாநிலங்களவையில் கூட திருச்சி சிவா உறுப்பினர் என்ற முறையில் சசிகலா புஷ்பா மீது எந்தப் புகாரும் கூறவில்லை. ஒருவேளை எல்லோரும் புத்தர்களாகி விட்டார்களோ?
ஆனால், இந்த நாடகம் முடிவதற்குள் இன்னும் பல காட்சிகள் அரங்கேறப் போகிறது  என்பதாகவே தோன்றுகிறது. ஒருவேளை புத்தரின் புன்னகைக்கு அப்போது அர்த்தம் புரியலாம்!
(கட்டுரையாளர் தொடர்புக்கு: jeon08@gmail.com  https://www.facebook.com/appsmoo)

More articles

Latest article