https://www.instagram.com/p/B-oVIt-AKO-/

தமிழ்த் திரையுலகப் பிரபலங்களில் அதிகப்படியாக ட்விட்டர் தளத்தை உபயோகிப்பவர் என்றால் அது குஷ்பு தான். காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் இருப்பதால், கட்சி சார்ந்து அதிகமாக ட்வீட்கள் செய்வார்.

கொரோனா பரவுவதைத் தடுக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை விமர்சித்து ட்வீட் பதிவிட்டு வருபவர் குஷ்பு.கடந்த 2 நாட்களாக அவருடைய ட்விட்டர் தளத்தில் எந்தவொரு ட்வீட்டுமே வெளியாகவில்லை.

தற்போது தனது ட்விட்டர் கணக்கின் நிலை தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் தெரிவித்திருப்பதாவது, “ஒரு நாளுக்கு முன்னதாக, மூன்று வெவ்வேறு இடங்களிலிருந்து, மூன்று வெவ்வேறு நபர் என்னுடைய கணக்கைத் திறக்க அல்லது ஹேக் செய்ய முயற்சி செய்துள்ளனர் என்று ட்விட்டரிலிருந்து மெசேஜ் வந்துள்ளது. கடந்த இரண்டு தினங்களாக என்னுடைய ட்விட்டர் கணக்கை திறக்கவும் முடியவில்லை அதனுடைய பாஸ்வேர்டை மாற்றவும் முடியவில்லை. இதுதொடர்பாக ட்விட்டர் சார்பில் உதவி ஏதும் கிடைக்கவில்லை.

என்னுடைய கணக்கு முடக்கப்பட்டதாக ட்விட்டரிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன நடைபெறுகிறது என்று எந்த விவரமும் தெரியவில்லை. இந்தப் பிரச்னையை எப்படி தீர்க்க வேண்டும் என்பது குறித்து யாரேனும் தெரிவித்தால் அது பாராட்டத்தக்கதாக இருக்கும். வீட்டில் இருங்கள்.. பாதுக்காப்பாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.