குன்றத்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் அமைந்துள்ளது.
84 படிகள் கொண்ட குன்றின் மீது அமைந்த கோவில் இது. இக்கோவிலில் முருகன் சன்னதிக்கு நேரே நின்று பார்த்தால், முருகன் மட்டுமே தெரிவார். வள்ளி, தெய்வானையைக் காண முடியாது. சன்னதிக்கு இடப்புறம் அல்லது வலப்புறம் நின்று முருகனை பார்த்தால், வள்ளி அல்லது தெய்வானை ஆகிய இருவரில் ஒருவருடன் சேர்ந்திருக்கும்படிதான் தரிசிக்க முடியும் வகையில் சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது.
திருப்போரூரில் அசுரர்களுடன் போரிட்டு வென்ற முருகப்பெருமான், சாந்தமாகி திருத்தணிக்குச் சென்றார். வழியில் சிவபூஜை செய்ய எண்ணினார். இங்கு ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்தார். அப்போது இக்குன்றில் சிறிது நேரம் சிவனை வேண்டி தியானித்துவிட்டுச் சென்றார். பிற்காலத்தில் இப்பகுதியை குலோத்துங்க சோழ மன்னன், ஆட்சி செய்தபோது குன்றின் மீது முருகனுக்கு கோவில் கட்டப்பட்டது.
முருகனால் பூஜிக்கப்பட்ட சிவன், மலைக்கு அடிவாரத்தில் “கந்தழீஸ்வரர்” என்ற பெயரில், தனிக்கோவில் மூர்த்தியாக அருளுகிறார். கந்தனால் வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு இப்பெயர்.
முருகன் சன்னதி கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை இருக்கின்றனர். பிரகாரத்தில் காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, விநாயகர், பைரவர், நவக்கிரகம், நாகர் சன்னதிகள் உள்ளது. இங்குள்ள விமானம் ஷட்கோண அமைப்பில் உள்ளது.
திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள். முருகனுக்கு திருக்கல்யாணம் செய்து வைத்தும், வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.