பிராக்யராஜ்: மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக யாரும் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு, மாநில அரசின் சார்பாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்றும், கூட்ட நெரிசலில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
உலக நாடுகளே வியக்கும் வகையில் மகா கும்பமேளா உ.பி. மாநிலத்தில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. 45 நாட்கள் நடைபெறும் இந்த கும்பமேளாவில் சுமார் 45 கோடி பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு தொடங்கி (ஜனவரி 28) நேற்று (ஜனவரி 29) இரவு வரை 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும், அதை அமாவாசையுடன் கூடிய மவுனி அம்மாவாசை என்பதால், திரிவேணி சங்கமத்தில் நீராக ஒரே நாளில் சுமார் 10 கோடி பேர் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
“ஒரே நேரத்தில் கூட்டம் அதிகரித்ததால் தான் இந்த சம்பவம் நடந்தது. மேலும், கூட்டத்தினர் தடுப்புகளை உடைத்துக் கொண்டு மறுபுறம் குதித்து, அங்கிருந்தவர்களை யும் நசுக்கியது. கூட்ட நெரிசலில் படுகாயமடைந்த 90-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 30 பேர் உயிரிழந்தனர்,” என்று அவர் கூறினார்.
உயிரிழந்தவர்களில் 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரி கூறினார். அவர்களில் நான்கு பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள், தலா ஒருவர் அசாம் மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். படுகாயமடைந்தவர்களில் 36 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மீதமுள்ளவர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அவர்களது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நெரிசலில் தங்கள் குடும்ப உறவுகளை இழந்த பக்தர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து, இந்த சோகம் “மிகவும் வருத்தமளிக்கிறது” என்று விவரித்தார்.
இந்த நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கூட்ட நெரிசலுக்கான காரணங்களை ஆராய நீதிபதி ஹர்ஷ் குமார், முன்னாள் டி.ஜி. வி.கே. குப்தா மற்றும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். வி.கே. சிங் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட நீதித்துறை ஆணையத்தை நியமித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும் பக்தர்களுக்க வேண்டுகோள் விடுத்து யோகி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பிரயாக்ராஜுக்கு வரும் பக்தர்கள், உங்களுக்கு அருகிலுள்ள கங்கை ஆற்றில் நீராடுங்கள். திரிவேணி சங்கமம் நோக்கிச் செல்ல முயற்சிக்காதீர்கள். நீங்கள் அனைவரும் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஏற்பாடுகளை செய்வதில் ஒத்துழைக்க வேண்டும். சங்கத்தின் அனைத்து படித்துறைகளிலும் மக்கள் அமைதியாகக் குளித்து வருகின்றனர். எந்த வதந்திகளுக்கும் கவனம் செலுத்த வேண்டாம் எனப் பதிவிட்டுள்ளார்.