லகாபாத்

கும்ப மேளாவினால் மக்களுக்கு பலவகை தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

வட இந்தியாவில் உள்ள அலகாபாத் நகரில் கங்கை யமுனை நதிகள் சங்கமிக்கின்றன. இதில் சரஸ்வதி நதி பூமிக்கடியில் ஓடி வந்து அதே இடத்தில் சங்கமிப்பதாக ஐதிகம் உண்டு. இந்த மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்ப மேளா மிகவும் புகழ் வாயந்தது. இந்த விழாவுக்கு உலகெங்கும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கமாகும்.

சென்ற முறை கும்ப மேளாவின் போது கோடிக்கணக்கான மக்கள் கூடியதால் சுகாதாரம் சரிவர கவனிக்கப்படவில்லை என அரசு தணிக்கை ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த புகார் ஒவ்வொரு முறையும் தொடர்ந்து வந்தது. தற்போதைய கும்ப மேளா இந்த வருடம் ஜனவரி முதல் மார்ச் வரை நடந்தது. இப்போது தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகரம் நன்கு சுத்தம் செய்யப்பட்டு விட்டதாக மத்திய மற்றும் மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

ஆனால் தேசிய பசுமை தீர்ப்பாயம் இதை மறுத்துள்ளது. திர்ப்பாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அலகாபாத் நகரின் அருகில் உள்ள பாச்வார் திடக்கழிவு மேலாணமை ஆலையில் சுமார் 60 ஆயிரம் திடக்கழிவுகள் கிடக்கின்றன. இந்த ஆல கடந்த செப்டம்பரில் இருந்து இயங்காததால் இந்த தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் கும்ப மேளா சமயத்தில் உண்டான திடக்கழிவுகள் மட்டும் 13000 மெட்ரிக் டன்கள் ஆகும்.

இந்த திடக்கழிவுகள் சுத்திகரிக்கப்படாததால் பல வகை தொற்று நோய்கள் மக்களை தாக்கும் அபாயம் உள்ளது. எனவே மக்களுக்கு வயிற்றுப் போக்கு, வைரஸ் ஜுரம், கால்ரா, காமாலை போன்ற கொடிய நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. திருவிழா நேரத்தில் இந்த திடக்கழிவு மேலாணமை ஆலை ஏன் இயங்காமல் உள்ளது என்பதற்கு சரியான விளக்கத்தை அரசு அளிக்க வேண்டும்.

கழிப்பறையில் இருந்து வரும் நீர் ஒரு தொட்டியில் சேகரிக்கப்பட்டுள்ளது. அந்த தொட்டி சரியாக பூச்சு வேலை செய்யப்படாததால் கழிவு நீர் நிலத்தில் இறங்கி தற்போது நகரில் பல இடங்களில் நிலத்தடி நீர் கடும் மாசடைந்துள்ளது. இதனால் கங்கை நீர் மாசுபட மிகவும் அதிக வாய்ப்புள்ளது. மாநில மற்றும் மத்திய அரசுகள் பல திட்டங்களை கண்டிப்புடன் நிகழ்த்தாததே இதற்கு காரணம்.” என தெரிவித்துள்ள்து.