டெல்லி: கும்பமேளாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்து, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தனர்.
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த 14ம் தேதி தொடங்கியது. அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ள இந்த விழாவில் கோடிக்கணக்கான பக்தர்கள் திரண்டு திரிவேணி சங்மத்தில் புனித நீராடி வருகின்றனர். இதுவரை 10கோடிக்கும் மேலானோர் நீராடி சென்றுள்ள நிலையில், மேலும் பல கோடிபேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று தை அமாவாசையை முன்னிட்டு இன்று பக்தர்களின் கூட்டம் அதிக எண்ணிக்கையில் இருந்தது. பொதுவாக இன்று நீர்நிலைகள் உள்ள பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும். அதனால், திரிவேணி சங்கமத்திலும் நாடு முழுவதும் இருந்து கட்டுக்கடங்காகத கூட்டம் அலைமோதுகிறது. இதனால் அதிகாலை 2மணி அளவில், தடுப்புகள் உடைந்து, ஏராளமானோர் முண்டியடித்துக்கொண்டு செல்ல முயன்றதால், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள தடுப்புகளை அகற்றி பக்தர்கள் வெளியேற முயன்றனர். அப்போது சுமார் 50 பக்தர்கள் காயம் அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. உடனடியாக அந்த பகுதிகளில் தயாராக இருந்த ஆம்புலன்கள் மூலம் அவர்கள் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கும்ப மேளா கூட்ட நெரிசல் தொடர்பான விவரங்களை பிரதமர் மோடி கேட்டறிந்தார். இதேபோல் கூட்ட நெரிசல் விவரங்களை கேட்டறிந்த மத்திய அமைச்சர் அமித் ஷா, தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.