கும்பகோணம்: கும்பகோணம் பகுதியில் செயல்பட்டு வரும் அரச  கல்லூரி காலவரையறையின்றி மூடப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்து உள்ளது. பேராசிரி யர்களுக்கான எதிரான மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், கும்பகோணம் அரசினர் கலை அறிவியல் கல்லூரி மறு உத்தரவு வரும் வரை காலவரையின்றி கல்லூரி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  அதுபோல  நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.  இங்கு சில பேராசிரியர்கள் மாணவர்களை ஜாதி ரிதியிலாக விமர்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த   கல்லூரியில் முதுகலை தமிழ்த் துறை உதவிப் பேராசிரியராக இருக்கும் பெண் பேராசிரியை அண்மையில் முதுகலை தமிழ்த் துறை 2 ஆம் ஆண்டு மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடம் எடுத்தபோது, பண்டைய காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை முன்னிட்டு,   பெண்களை சாதி ரீதியாகவும்,  தரக்குறைவாக விமர்சித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.  அவரது விமர்சனம்,  அங்கு படித்து வரும் சில மாணவர்களை குறிவைத்து பேசியதாக ஒரு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதற்கு மாணவர்களின் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சாதி ரீதியாகவும்,  தரக்குறைவாக விமர்சித்த பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தினர். ஆனால், கல்லூரி நிர்வாகம், அவர்மீது நடவடிக்கை எடுக்கவில்லை.  . இதையடுத்து, மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   கடந்த 6 நாட்க ளாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கல்லூரி காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கல்லூரி நிர்வாகத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி நிர்வாகம் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கும்பகோணம், அரசினர் கலைக் கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்லூரியின் அசாதாரண சூழல் கருதி கல்லூரி ஆட்சிமன்றக் குழுவின் தீர்மானத்தின்படி, மறு உத்தரவு வரும் வரை கல்லூரி காலவரையறையின்றி மூடப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.