சென்னை: சிறந்த இலக்கியவாதியான குமரி அனந்தன்  பெருந்தலைவர் காமராசருடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர் என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதுபெரும் அரசியல் தலைவரான குமரி அனந்தன் சிறுநீரக பிரச்சனை காரணமாக, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 4-ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி அவர் தனது 93-வது வயதில் காலமானார். 5 முறை எம்.எல்.ஏ-வாகவும், ஒரு முறை எம்.பி-யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட குமரி அனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

இலக்கிய செல்வர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட குமரி அனந்தனுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு தமிழக அரசு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கி கௌரவித்தது. மறைந்த குமரி அனந்தனின் உடல் சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குமரிஅனந்தன் மறைவுக்கு மத்திய அமைச்சர் எல்முருகன்,  விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதியாகவும், காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவராகவும் பொறுப்புகள் வகித்த அனந்தன் காலமானார் என்ற செய்தி மிகுந்த மன வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநருமான தமிழிசையின்  தந்தையான குமரி அனந்தன்  பெருந்தலைவர் காமராசர் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தமிழ் மொழியின் மீது மட்டற்ற பற்று கொண்டிருந்தமையால், தமிழக அரசின் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டார். இன்று அவர் மறைந்த இந்த துயரமான சமயத்தில், முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கும் , அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கும்,ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாக  எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மிகச்சிறந்த இலக்கியவாதியுமான குமரி அனந்தன் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். பாசமிகு தந்தையாரை இழந்து சொல்லொண்ணா துயரில் வாடும் அன்புச் சகோதரி தமிழிசைக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி:

வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  “இலக்கியச் செல்வர்” என்று அனைவராலும் போற்றப்பட்ட முதுபெரும் அரசியல் தலைவரும் புதுச்சேரியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் தமிழசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக உள்ளது.

சிறந்த தேசப் பற்றாளராக விளங்கிய அவர், நான்கு முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ்க் கலாச்சாரத்தின்மீது ஆழ்ந்த பற்று கொண்டு தமிழ் மொழிக்காகவும், தமிழர் நலனிற்காகவும் பல அரும்பணிகளை ஆற்றிய அவர், தமிழில் மிகச்சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தவர். பாராளுமன்றத்தில் தமிழில் கேள்வி எழுப்பும் உரிமையைப் பெற்றுத் தந்து முதன்முதலில் பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றிய பெருமைக்குரிய குமரி அனந்தன், விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிடவும், தந்தி விண்ணப்பங்கள், மணியார்டர் போன்றவற்றில் தமிழ் இடம் பெறவும் போராடி தமிழ் மொழிக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்தவர்.

தமிழுக்குத் தொண்டாற்றி பெரும் தமிழ்ப்பற்றாளராக விளங்கிய தகைசால் தமிழர் திரு குமரி அனந்தன் அவர்களின் மறைவு, தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரைச் சார்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்

வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவரும், பெருந்தலைவர் காமராசரின் அன்பைப் பெற்றவருமான குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானர் என்பதையறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தமிழக காங்கிரஸ் கமிட்டி கண்ட சிறந்த தலைவர்களில் குமரி அனந்தனும் ஒருவர். வாழ்நாள் முழுவதும் மக்கள் நலனுக்காகவும், தமிழகத்தின் நலனுக்காகவும் பாடுபட்டவர்.

இளம் வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்ந்தெடுக்கப்பட்ட அவர், நாடாளுமன்றத்தில் தமிழில் வினா எழுப்பும் உரிமையைப் பெற்றுத் தந்தவர். அஞ்சல் துறை படிவங்களை தமிழில் வெளியிட வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றவர். விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் போராடியவர்.

என் மீதும், பாட்டாளி மக்கள் கட்சி மீதும் மிகுந்த அன்பு கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட மதுவுக்கு எதிரான போராட்டங்களில் குமரி அனந்தன் கலந்து கொண்டுள்ளார். அன்னைத் தமிழைக் காப்பதற்காக பாமக மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கியவர் அவர்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குமரி அனந்தன் முழுமையாக நலமடைந்து வீடு திரும்புவார் என்று நான் உறுதியாக நம்பினேன். ஆனால், ஆகச் சிறந்த தமிழ்ப் பற்றாளரான குமரி அனந்தனை இயற்கை நம்மிடமிருந்து பிரித்ததை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

குமரி அனந்தனை இழந்து வாடும் அவரது மகள் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள், காங்கிரஸ் பேரியக்கத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், தலைசிறந்த தேசியவாதியான குமரி அனந்தன் மறைவு தமிழகத்துக்கும், இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு, தகப்பனாரை இழந்து வாடும் அக்கா தமிழிசைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டுளார்.

பா.ஜ., தலைவர் அண்ணாமலை  வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், காமராஜருடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவரும் தமிழிசை அவர்களின் தந்தையாருமாகிய, இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் இன்று நம்மிடையே இல்லை என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், அப்பழுக்கின்றி பணியாற்றியவர். பல்வேறு தமிழ் இலக்கியங்கள் சார்ந்த நூல்களை எழுதியவர்.

பனைமரங்கள் பாதுகாப்புக்காவும், நதிகள் இணைப்புக்காகவும், பாரதமாதா கோவில் அமைக்கவும், பாதயாத்திரைகள் மேற்கொண்டவர்.

தலைசிறந்த தேசியவாதியான குமரி அனந்தன் மறைவு, தமிழகத்துக்கும், இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு. தகப்பனாரை இழந்து வாடும் தமிழிசை அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா, இறைவன் திருவடிகளை அடைய வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் எம்எல்ஏ வானதி சீனிவாசன்

குமரி அனந்தன் மறைவுக்கு பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினராக சிறப்பாக செயல்பட்ட குமரிஅனந்தன் மறைந்தார் என்ற செய்தியறிந்து பெரும் துயரம் அடைந்தேன். பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் அரசியலில் அடையாளம் காணப்பட்டு, தன் தமிழால், பேச்சாற்றலால் இளைஞர்களிடம் தேசப்பக்தியை விதைத்தவர். தமிழுக்கும், இந்திய தேசியத்திற்கும் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. குமரிஅனந்தன் அவர்களின் மறைவால் வாடும் தெலுங்கானா, புதுச்சேரி முன்னாள் ஆளுநர், பாஜக மூத்த தலைவர் அக்கா டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி என தெரிவித்துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன்

 குமரி அனந்தன் மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் (93) அவர்களின் மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. தனது இறுதிமூச்சு வரையில் காந்தியடிகள் மற்றும் காமராசர் ஆகியோரின் கொள்கை வழியில் பயணித்தவர். மதுவிலக்கு கொள்கையை உயிர்மூச்சாகக் கொண்டு அதில் உறுதிகுலையாமல் நின்றவர். அண்மையில் விடுதலைச் சிறுத்தைகளின் மகளிர் அணி நடத்திய “மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டுக்கு” ஆதரவு தெரிவித்து வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அத்துடன், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பாராட்டினார். இதையும் படியுங்கள்: அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ரவிச்சந்திரனிடம் 3-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை “இவர்கள் சிறுத்துப் போவார்கள் என்றெண்ணி ஆதிக்க சக்திகள் இவர்களை அடக்கி ஒடுக்கினார்கள்; ஆனால், இவர்களோ சிறுத்துப் போகவில்லை; மாறாக, சிறுத்தையானார்கள்” -என்று எம்மை ஊக்கப்படுத்தியவர். தனிப்பட்ட முறையில் என்மீது மாறாத அன்பு செலுத்தியவர். அவருடைய இழப்பு தமிழ்ச் சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் காந்தி- காமராசர் வழிவந்த தொண்டர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இலக்கியச்செல்வருக்கு எமது செம்மாந்த வீரவணக்கம் என தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி

குமரி அனந்தன் மறைவுக்கு வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக காங்கிரஸின் மூத்த தலைவரும், பெருந்தலைவர் காமராசரின் சீடருமான இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன் உடல்நலக்குறைவால் காலமானர் என்பதையறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தேசப்பற்று மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவரான குமரி அனந்தன், இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். காமராசர் காலத்தில் இளைஞர் காங்கிரசின் மாநில அமைப்பாளராக நியமிக்கப்பட்ட அவர், தமிழகம் முழுவதும் பயணம் செய்து கட்சியை வளர்த்தார்.

காமராஜரின் அன்பைப் பெற்று அவரது சீடராக மாறிய குமரி அனந்தன், காமராசரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய நாகர்கோயில் மக்களவைத் தொகுதியில் 1977-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். என் மீது தனிப்பட்ட முறையில் அன்பு கொண்டிருந்தவர். தமிழகத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் என்பது தான் அவரது உயர்ந்த நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. அதை பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டும் தான் சாதிக்க முடியும் என்று உறுதியாக நம்பினார்.

அண்மையில் கூட, உடல் நலிவடைந்த நிலையிலும் என்னுடன் தொலைபேசியில் பேசிய குமரி அனந்தன், தமிழகத்தில் எப்படியாவது மதுவை ஒழித்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அவரது மறைவு மது ஒழிப்பு முயற்சிக்கு பேரிழப்பாகும். குமரி அனந்தனை இழந்து வாடும் அவரது மகள் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்  என  தெரிவித்துள்ளார்.

வைகோ:

குமரி அனந்தன் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் , தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், தகைசால் தமிழர், இலக்கிய செல்வர் குமரி அனந்தன் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தியாகச்சுடர், பெருந்தலைவர் காமராஜரின் அடியொற்றி அரசியல் பயணத்தைத் தொடங்கிய குமரி அனந்தன் தமிழக அரசியல் களத்தில் தனித்ததோர் இடத்தை பெற்றிருந்தவர். நாடறிந்த நல்ல தமிழ் பேச்சாளர், சீரிய சிந்தனையாளர், சிறந்த எழுத்தாளர் என பன்முக ஆற்றல் மிக்க தலைவராக திகழ்ந்தவர்.

தமிழ் இலக்கியங்களில் தோய்ந்து, கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் அவர் உரையாற்றும் சொல்லேர் உழவராக திகழ்ந்ததால் தமிழ் உலகம் அவரை ‘இலக்கியச் செல்வர்’ என்று கொண்டாடி மகிழ்ந்தது. நாடாளுமன்ற உறுப்பினராக அவர் ஆற்றிய அரும் பணிகள் சரித்திரத்தில் என்றும் நிலைத்திருக்கும்.

நாடாளுமன்றத்தில் தமிழில் உரையாற்றும் உரிமையைப் பெற்றதும், தபால் போக்குவரத்துத் துறையில் மணியார்டர் உள்ளிட்ட விண்ணப்பங்கள் தமிழில் இடம் பெற வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றதும் அவரது மகத்தான சாதனைகள் ஆகும்.

முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என வாழ்நாள் எல்லாம் அதற்காக குரல் கொடுத்தவர்; மது இல்லா தமிழகம் காணவும், நதிகளை இணைக்கவும் கோரிக்கைகளை முன்வைத்து மூன்று முறை தமிழகத்தில் நடை பயணம் மேற்கொண்டு நடைபயண நாயகர் எனும் சிறப்புக்கு உரியவர் ஆனார்.

குமரி அனந்தன், நான் “முழு மதுவிலக்கு எங்கள் இலக்கு” என்று அறிவித்து 2012 டிசம்பர் 12-ம் தேதி நெல்லை மாவட்டம், உவரி கடற்கரையில் இருந்து நடை பயணத்தை தொடங்கிய போது நெஞ்சார வாழ்த்துக்களை தெரிவித்ததை மறக்க முடியாது.

தன்னேரில்லாத் தமிழ் தொண்டர், மாசு மருவற்றத் தலைவர் குமரி அனந்தனை இழந்து வாடும் அவரது மகள் சகோதரி தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழக மூத்த அரசியல்வாதி, இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் உடல்நிலைக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன்.குமரிஅனந்தன் பெருந்தலைவர் காமராஜர் மீது மிகுந்த பற்றுக்கொண்டவர். சிறுவயதிலேயே பெருந்தலைவரால் ஈர்க்கப்பட்டு தன்னை அரசியலில் ஈடுபடுத்திக்கொண்டவர். தனது அரசியல் பணியாலும், மக்கள் பணியாலும், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றி, தான் சார்ந்த தொகுதிக்கும், தமிழகத்திற்கும் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தவர்.

இலக்கியச் செல்வா் குமரி அனந்தன் தமிழின் மீது தீராத பற்றுக்கொண்டவர். தமிழ் இலக்கியத்தில் மிகுந்த புலமை பெற்றவா். இவரது இலக்கிய பேச்சாற்றலால் அனைவராலும் இலக்கியச் செல்வர் என்று அன்போடு அழைக்கப்பட்டார். பல்வேறு நூல்களை இயற்றியவர். நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்விக் கேட்கவும், தமிழில் மணியார்டர் அனுப்பவும், தமிழில் தந்தி அனுப்பவும் போராடி வெற்றிக் கண்டவர்.

குமரி அனந்தன் நதிகளை இணைக்க வேண்டும், பாரதமாதாவுக்கு தருமபுரியில் கோயில் கட்டவேண்டும் என்று பல்வேறு உயா்ந்த கொள்கைகளுக்காக பல்வேறு முறை நடைபயணம் மேற்கொண்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, மத்திய, மாநில அரசுக்கும் உணா்த்தியவர். மக்கள் தலைவா் மூப்பனார் மீது மிகுந்த அன்பு கொண்டவர் நட்புக்கொண்டவர். இலக்கியச் செல்வரின் மறைவு தமிழகத்திற்கும், தமிழ் இலக்கிய உலகுக்கும் மிகப்பெரிய இழப்பாகும்.

குமரி அனந்தனை இழந்துவாடும் அவர்களது குடும்பத்திற்கும், அவர்களது அன்பு மகள் முன்னாள் ஆளுநர் டாக்டா் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் ஆழ்ந்த இரங்கலை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் நடிகர் விஜய்:

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆசிரியராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி, நம் கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் சேர்ந்து பயணித்து மக்கள் சேவையாற்றியவர்; மது ஒழிப்பிற்காகத் தம் வாழ்நாள் முழுவதும் போராடியவர்; தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக, ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக நேர்மையுடன் பணியாற்றியவர். இதையும் படியுங்கள்: தாம்பரம் மேம்பாலத்தில் திடீர் பள்ளம் எளிமையாக மக்களோடு மக்களாக வாழ்ந்த அய்யா குமரி அனந்தன் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என கூறியுள்ளார்.