மாண்டியா

டிகை சுமலதா குறித்து தவறான கருத்துக்களை கூறிய அமைச்சர் ரேவண்ணாவுக்காக முதல்வர் குமாரசாமி மற்றும் அவர் மகன் நிகில் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

குமாரசாமி – நிகில்

கர்நாடக மாநில சட்டப்பேரவை உறுப்பினரும் பிரபல நடிகருமான அம்பரீஷ் சமீபத்தில் மரணம் அடைந்தார்.   அவர் மனைவி நடிகை சுமலதா தனது கணவரின் மாண்டியா தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.   அந்த தொகுதி காங்கிரஸ் கூட்டணியில் மஜத வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.   மாண்டியாவில் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிட உள்ளார்.

ரெவண்ணா

முதல்வர் குமாரசாமியின் சகோதரரும் கர்நாடக அமைச்சருமான ரேவண்ணா செய்தியாளர்களிடம் சுமலதா தனது கணவர் இறந்து ஒரு மாதத்துக்குள் தேர்தலில் போட்டியிட உள்ளதை கண்டித்து பேசி உள்ளார்.   இந்த செய்தி மாண்டியா மக்களிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது.   பல தரப்பினரும் ரேவண்ணாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சுமலதா

இது குறித்து முதல்வர் குமாரசாமி, ”எங்கள் குடும்பம் எப்போதும் எந்த ஒரு பெண்ணையும் தவறாக பேசியதில்லை.   எனது சகோதரர் ரேவண்ணாவின் கருத்தினால் யார் மனதாவது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கோருகிறேன்.

செய்தியாளர்கள் சுமலதா தனது கணவர் இறந்து ஒரு மாதத்துக்குள் போட்டியிடுவது குறித்து கருத்துக்களை சொன்னபோது அதை ரேவண்ணா ஆமோதித்துள்ளார்.   ஆனால் ஊடகங்கள் கேள்வியை காட்டாமல் இவர் பதிலை மட்டும் ஒளிபரப்பியதால் இந்த குழப்பம் நேர்ந்துள்ளது” என கூறி உள்ளார்.

முதல்வர் குமாரசாமியின் மகனும் மாண்டியா தொகுதி மஜத வேட்பாளருமான நிகில், “எனது பெரியப்பா ரேவண்ணா எதற்காக அப்படி சொன்னார் என்பது குறித்து எனக்கு தெரியவில்லை.   அவர் இது போல சொல்லி இருக்க கூடாது.  எங்கள் கட்சி எப்போதும் பெண்களுக்கு மரியாதை அளித்து வருகிறது.   இனியும் அது தொடரும்” என தெரிவித்துள்ளார்.