உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள அருள்மிகு முத்தாரம்மன் ஞானமூர்த்திஸ்வரன் கோவில் வருடாந்திர 12நாள்  தசரா திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இறுதிநாளான 26-ந் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. கொரோனா முடக்கம் காரணமாக, பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில்ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா  பெரும் புகழ்பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்து, குலசை தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. தசரா திருவிழாவையொட்டி, பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து காளி, அம்மன் உள்பட பல்வேறு வேடங்களை தரித்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துவர்.

12 நாள் நடைபெறும் இவ்விழாவின் ,  10-ம் நாள் சூரசம்ஹாரம் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு சூரசம்ஹாரம் வருகிற 26-ந் தேதி(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் திரளுவது வழக்கம்.

இந்த ஆண்டு கொரோனா  பரவல் நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி, கொடியேற்றத்தின்போது பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி  இல்லை என்றும்,  கோவில் மூலம் பக்தர்களுக்கு காப்புக்கள் எதுவும் கட்டப்படமாட்டாது. முக்கிய திருவிழா நாட்களான  1வது, 10வது  11வது ஆகிய திருவிழா நாட்களின்போது,  பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

மற்ற நாட்களில் பக்தர்கள்  காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை எவ்வளவு பக்தர்கள் தரிசனம் செய்யலாம். ஆனால், அதற்கு ஆன்லைன் அனுமதி பெற வேண்டும் என்றும், ஒருநாளைக்கு 8 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி மற்றும்,  விழாக்காலங்களில்,  சுவாமி புறப்பாடு வெளியில் செல்லாமல் உள்பிரகாரங்களில் மட்டும் நடைபெறும்.  அதுபோல் உற்சவ மூர்த்தி வீதி உலா கோவில் உள்பிரகாரத்தில் மட்டும் நடைபெறும், பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

தசரா திருவிழாவை முன்னிட்டு, கோவிலில் நாளை(சனிக்கிழமை) காலை 10.45 மணிக்கு கொடிப்பட்டம் எழுந்தருளி, கோவிலைச் சுற்றி வலம் வந்து, கோவில் முன்புள்ள கொடிமரத்தில் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து கொடிமரத்துக்கு 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
பக்தர்கள் வேடம் தரித்து தசராவை சிறப்பிக்கும் காட்சி

தொடர்ந்து,    1, 10, 11-ம் திருவிழா நாட்களில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2வது நாள்  9-ம் திருவிழா வரையிலும், விழாவின் நிறைவு நாளிலும் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் அரசின் வழிகாட்டுதல்படி தினமும் 8 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவதாகவும்,  ஒவ்வொரு ஊரிலும் பதிவு செய்யப்பட்ட தசரா குழு நிர்வாகிகள், 2 முதல் 9-ம் திருவிழா வரையிலும் குலசேகரன்பட்டினம் கோவில் அலுவலகத்தில் மஞ்சள் கயிறு காப்புகளை மொத்தமாக வாங்கி சென்று, தங்களது ஊர்களில் விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். தொடர்ந்து இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி, கோவிலைச் சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

10-ம் நாளான வருகிற 26-ந் தேதி(திங்கட்கிழமை) காலை 10.15 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, கோவிலின் முன்பு மகிஷாசுரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

11-ம் நாளான 27-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் சூரசம்ஹாரம் முடிந்ததும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். பின்னர் அம்மன் கோவிலைச் சுற்றி வலம் வந்து, மீண்டும் கோவிலை சேர்கிறார்.

28-ந் தேதி(புதன்கிழமை) மதியம் அம்மனுக்கு பாலாபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது.

தசரா திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்து யூ-டியூப் இணையதளம் வழியாகவும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.