திருநெல்வேலி: தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கூடங்குளம் அணுமின் நிலைய விஞ்ஞானி உள்பட 13 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
மாநிலம் முழுவதும் இன்று 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,62,935 ஆக உயர்ந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 171 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்றி வரும் சிலருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அங்கு பணியாற்றும் ஒரு தரப்பினருக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில், அங்குள்ள ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்த ரஷ்ய விஞ்ஞானி ஒருவர் உள்பட 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அணுஉலை ஊழியர்கள் குடியிருக்கும் அணுவிஜய் நகரியத்தை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்ற சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அணுவிஜய் நகரியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ரஷ்ய விஞ்ஞானிகள் உள்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.