திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் இடுக்கியில், 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் பலத்த காயத்துடன் மீட்ககப்பட்டனர்.
கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டம் புல்லுப்பாறை அருகே பள்ளத்தாக்கில் கேஎஸ்ஆர்டிசி பேருந்து கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அரசு பஸ்சினை வாடகைக்கு எடுத்து, மாவேலிக்கரையில் இருந்து தஞ்சாவூருக்கு சுற்றுலா சென்ற சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து சென்றிருந்த நிலையில், சுற்றுலா குழு திரும்பி வந்து கொண்டிருந்த போது இன்று காலை பேருந்து விபத்துக்குள்ளானது.
புல்லுப்பாறை அருகே பள்ளத்தாக்கு பகுதியில் பேருந்து வளைவில் திரும்பும்போது, கட்டுப்பாட்டை இழந்து 30 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், பஸ் மரத்தில் மோதி நின்றது. பேருந்தில் 34 பயணிகளும் இரண்டு ஊழியர்களும் இருந்தனர்.
இந்த விபத்து இன்று (திங்கட்கிழமை ) காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிரேக் பழுதானதால் வாகனம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. விளம்பரம் பீருமேடு மற்றும் முண்டக்காயத்தில் இருந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலை போலீஸ் குழுவும் புறப்பட்டு சென்றது. மீட்புப் பணிகளுக்காக மோட்டார் வாகனத் துறை குழுவினரும் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி காயம் அடைந்தவர்களை மீட்டனர். உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது, நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.