சென்னை: கிருஷ்ணகிரி அருகே செயல்பட்டு வரும் கிங்ஸ்லி எனப்படும் தனியார் பள்ளியில் மாணவிகள் பலர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர் உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசத்தை மட்டுமே வாரியிறைத்து அவர்கள் தன்வசப்படுத்தி வரும் தமிழ்நாடு அரசு அந்த மாணாக்கர்களுக்கு தேவையான கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் கல்விக்கூடங்களில் கிடைக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்வது இல்லை. ஏற்கனவே மாணாக்கர்களை அடிக்கக்கூடாது , கடிந்து பேசக்கூடாது என்று என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது அரசும், பள்ளி மாணவர்களிடையே விரோத போக்கை வளர்த்து வரும் வகையில் சிறப்பு ஸ்காலர்ஷிப் போன்றவைகளை வழங்கி வருகிறது. இதனால், ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்களில் சிலருக்கு சில சலுகைகள் கிடைப்பதும், சிலருக்கு கிடைக்காமல் இருப்பதும் சக மாணவர்களிடையே அதிருப்தியை மேலோங்க செய்து வருகிறது.
அதுபோல, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச காலை உணவு தயாரிக்கும் சமையற் கூடம் உள்பட பள்ளிகளில் போதிய சுகாதார வசதிகள் செய்யப்படுவது இல்லை. சுத்தமான குடிநீர் வழங்கப்படுவது இல்லை. சத்துணவு கூடம் மற்றும் சமையல் பாத்திரங்கள் சத்தமாக இருப்பது இல்லை. மாணவர்களின் கழிவறை படு கேவலமாக காணப்படுகிறது. இதுபோன்ற செயல்களில் கவனம் செலுத்த வேண்டிய பள்ளி கல்வித்துறை அதிகாரிகளும், பள்ளி ஆசிரியர்களும் அதை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். இதை சமீபத்தில் ஆங்கில நாளேடு ஒன்று விவரமாக சுட்டிக்காட்டியது நினைவிருக்கலாம்.
மேலும் அரசு பள்ளியில் பணியாற்றும் பெரும்பாலான ஆசிரியர்கள், பழைய இடைநிலை கல்வி பயின்று ஆசிரியர் பணிகளுக்கு வந்தவர்கள். அவர்களால், தற்போதைய பாடத்திட்டத்தை சிறப்பாக நடத்த முடியாத நிலையே நிலவுகிறது. அவர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு இளம் ஆசிரியர்களை பணிக்கு சேர்க்க வேண்டிய அரசோ, அதை செய்யாமல் ஏற்கனவே வயது முதிர்வு காரணமாக தள்ளாடும் ஆசிரியர்களின் பணிக்காலத்தை நீட்டிக்கவே விரும்புகிறது. இதனால் பல ஆயிரம் இளைய தலைமுறையினரின் அரசு பணி கனவு காணல் நீராக மாறி வருகிறது.
திறமையற்ற மாநிலஅரசின் நிர்வாகத்தாலும், திறமையற்ற ஆசிரியர்களினாலும் தமிழ்நாட்டின் இளைய தலைமுறையினர் சீரழிந்து வருகின்றனர். ஏற்கனவே போதை பொருட்கள் நடமாட்டம் பல அரசு பள்ளிகளில் காணப்பட்டு வரும் நிலையில், அரசு அதை தடுக்கும் நடவடிக்கையை முடுக்கி விடுவதற்கு பதிலாக, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான திட்டங்களை அறிவித்தும், பணத்தை இலவசமாக வழங்கியும், அவர்களின் உல்லாச வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்து கொடுக்கிறது.
அரசின் இதுபோன்ற செயல்களால், பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்குமே தவிர, மாணாக்கர்களின் திறமை பளிச்சிடுமா என்பது கேள்விக்குறியே. அரசு பள்ளி மாணவர்கள் திறமையை வளர்க்க அவர்கள், முறையபான கல்வி பெற வேண்டியது அவசியம். அதை கண்காணிக்க வேண்டியது ஆசிரியர்கள் பணி. ஆனால், இன்றைய மாணவ சமுதாயத்தினரின் நடவடிக்கைளால், ஆசிரியர்களும், அவர்களை கண்டுகொள்ளாத நிலையே உள்ளது. ஆசிரியர்கள் சம்பளம் வந்தால் போதும் என மனநிலையில், பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இதன் காரணமாகவே, பள்ளிகளில் சமீப காலமாக பாலியல் வன்முறைகள், சாதிய மோதல்களும் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில்தான், கிருஷ்ணகிரி பகுதியில் செயல்பட்டு வந்து தனியார் மேல் நிலைப் பள்ளியில் போலி என்.சி.சி முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாலியல் வழக்கில் முதன்மை குற்றவாளியாக கருத்தப்பட்ட நபர், காவல்துறை பாதுகாப்பின்போதே தற்கொலை செய்த நிலையில், இதன் காரணமாக எழுந்த மனவருத்தத்தால், அவரின் தந்தையும் அதிக அளவில் மதுஅருந்தி ரோட்டில் விழுந்து மரணமடைந்துள்ளார்.
இந்த விவகாரம் மேலும் சர்ச்சையான நிலையில், கிருஷ்ணகிரி கிங்ஸ்லி பள்ளி பாலியல் விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி உயர்நீதி மனற்த்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழநாடு அரசின் பள்ளி கல்வித்துறை மீது கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசின் அனுமதியின்றி தனியார் பள்ளிகள் அவர்கள் இஷ்டம் போல் செயல்படுகின்றன என கேள்வி எழுப்பியதுடன், பள்ளிக்கல்வித்துறை அனுமதி யின்றி எப்படி ஒரு தனியார் பள்ளி முகாம் நடத்த முடியும் என கேள்வி எழுப்பியதுடன், போலியாக ஒரு என்சிசி முகாம் என்ற பெயரில் முகாமை நடத்த பள்ளி நிர்வாகம் எப்படி அனுமதி வழங்கியது, நள்ளிரவில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை பள்ளி நிர்வாகம் எப்படி அனுமதித்தது, பள்ளி கல்வித்துறை, அந்த பள்ளி மீது எடுத்த நடவடிக்கை என்ன? என சரமாரி கேள்வி எழுப்பியது.
இந்த வழக்கில், போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் பயிற்சியாளா் சிவராமன், பள்ளி முதல்வா் சதீஷ்குமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சிவராமன் இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து தற்போது, மேலும் 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பள்ளி முதல்வரான திருப்பத்தூா், பூங்காவனத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சதீஷ்குமாா் (35), பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியா் கந்திகுப்பம், இந்திரா நகரைச் சோ்ந்த ஜெனிபா் (35), பள்ளித் தாளாளரான கந்திகுப்பத்தைச் சோ்ந்த சாம்சன் வெஸ்லி (52), பயிற்சியாளா்களான தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கொள்ளுப்பட்டியைச் சோ்ந்த சக்திவேல் (39), கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், பேரிகை அருகே உள்ள அமுதகொண்டப்பள்ளியைச் சோ்ந்த சிந்து (21), கிருஷ்ணகிரி கிட்டம்பட்டியைச் சோ்ந்த பெண் சத்யா (21), பா்கூரை அடுத்த சின்ன ஒரப்பத்தைச் சோ்ந்த சுப்பிரமணி (54) ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குடியாத்தத்தைச் சேர்ந்த சுதாகரும், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கமலும் தலைமறைவாக இருந்தனர். அவர்கள் இருவரையும் காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அவர்கள் இருவரும்(ஆக. 26) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.