கிருஷ்ணகிரி: மழலை பள்ளிக்கு என்ஓசி (தடையில்லா சான்றிதழ்) வழங்க லஞ்சம்  வாங்கிய கிருஷ்ணகிரி வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் எந்தவொரு அரசு சான்றிதழ் வாங்கவும், அனுமதி பெறவும், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் தொடர்கிறது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவது இல்லை என்பதை அரசு அதிகாரிகள் நிரூபித்து வருகின்றனர். இதை தடுக்க, தமிழ்நாடு அரசு பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்தாலும், அரசு அதிகாரிகளின் லஞ்ச லாவண்யம் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் – பாகலூர் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளி தரப்பில், தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) வழங்கக்கோரி அரவிந்த், மாவட்ட வருவாய்த்துறைக்கு விண்ணப்பித்து இருந்தனர்.  இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு ஓசூர் வட்டாட்சியர் கவாஸ்கர், சம்பந்தப்பட்ட மழலையர் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் பள்ளியில் சில குறைகள் இருப்பதாகவும் அவற்றை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

உடனே குறைகளை சொன்னால் நிவர்த்தி செய்வதாக பள்ளி நிர்வாகம் கூறிய நிலையில்,  அதெல்லாம் தேவையில்லை, தனக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் உடனடியாக தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதைக் கேட்ட  பள்ளி நிர்வாகியான அரவிந்த், தொகை அதிகமாக இருப்பதாக கூறி பேரம்பேசி இறுதியில்  42ஆயிரம் ரூபாய் லஞ்சம் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக பள்ளி நிர்வாகி அரவிந்த், கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அரவிந்த்திடம் 42 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளில் ரசாயன பவுடர் தடவி அவரிடம் கொடுத்து அனுப்பினர். அந்த பணத்துடன் சென்ற அரவிந்த், கடந்த 14 ஆம் தேதி வட்டாட்சியர் கவாஸ்கர், துணை வட்டாட்சியர் மங்கையர்க்கரசி ஆகியோரிடம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் இருவரையும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

லஞ்ச வழக்கில் வட்டாட்சியரும், பெண் துணை வட்டாட்சியரும் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் மாவட்ட வருவாய்த்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.