முன்னணி இயக்குநராக விக்னேஷ் சிவன், ‘ரெளடி பிக்சர்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதன் முதல் தயாரிப்பாக, நயன்தாரா நடித்து வரும் ‘நெற்றிக்கண்’ படத்தைத் தயாரித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து ‘ராக்கி’ மற்றும் ‘கூழாங்கல்’ ஆகிய படங்களின் ஒட்டுமொத்த உரிமையையும் கைப்பற்றியுள்ளார்.
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து வரும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தினை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறார் விக்னேஷ் சிவன்.
இதனை தொடர்ந்து புதிய படமொன்றைத் தயாரிக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
‘வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்’ என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தை வி.விநாயக் இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் தலைப்பை அனிருத், விஜய் சேதுபதி மற்றும் கெளதம் மேனன் இணைந்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.
இதில் சூரரைப் போற்று படத்தில் நடித்த கே.கே நாயகனாக நடித்து வருகிறார். நாயகியாக ஜோனிடா காந்தி நடித்து வருகிறார். டாக்டர் படத்திலிருந்து செல்லம்மா பாடல் வீடியோவில் நடித்திருந்தார் ஜோனிடா காந்தி.
சென்னையில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, பாண்டிச்சேரியில் அடுத்தகட்டப் படப்பிடிப்பைத் துவங்கத் திட்டமிட்டுள்ளனர்.