திருவனந்தபுரம்: 
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்துக்குக் காரணம் விமானியின் தவறு என விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி அன்று ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஏர் இந்தியா விமானம் வந்தது. 190 பயணிகளுடன் வந்த அந்த விமானம் மழையின் காரணமாகத் திருவனந்தபுரத்தில் தரை இறங்க முடியாமல் கோழிக்கோடு விமான தளத்தில் தரை இறங்கியது.
கன மழை பெய்ததால் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் விமானத்தைத் தரையிறக்க முடியாமல் தவித்த விமானிக்கு கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி கோழிக்கோடு விமான நிலையத்தில் ரன்வே தெரியாததால் இரண்டு முறை வானத்திலேயே வட்டமடித்துக் கொண்டு இருந்த விமானிக்கு, முதலில் ரன்வே 28ல் இறங்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதில் இறங்க முடியாததால் ரன்வே 10ல் இறங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ரன்வே 10ல் 1000 மீட்டருக்கு முன்பு அந்த விமானம் தரை இறங்கி ஓடுதளத்தை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணம் செய்தவர்களில் 2 விமானிகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய விமான விபத்துக்கான விசாரணை அமைப்பு அமைக்கப்பட்டது.
இது தொடர்பான விசாரணை அறிக்கையில், விமானியின் தவறே விபத்துக்குக் காரணம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.  இரண்டு முறைக்கு மேல் முயன்றும் விமானம் தரையிறங்க இயலவில்லை என்றால் மற்றொரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தும் அதை விமானி பின்பற்றவில்லை என, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.