சென்னையில் கொரோனா பரவலுக்கு கோயம்பேடு மார்க்கெட் ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, கடந்த மே 5-ந் தேதி கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. அதையடுத்து, தற்காலிக மார்க்கெட் திருமழிசையில் அமைக்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது சென்னையில் கொரோனா ஓரளவு தடுக்கப்பட்டு வருவதால், மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட் வருகிற 28-ந்தேதி மீண்டும் திறக்க தமிழகஅரசு அனுமதி வழங்கியது. முன்னதாக கடந்த 18ந்தேதி முதல் மொத்த வணிகக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், கோயம்பேடு வியாபாரிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) வெளியிட்டுள்ளன.
அதன்படி,
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக கடைகள் திறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பே, கடை உரிமையாளர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள் ஆகிய அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
மார்க்கெட்டுக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களும் மருத்துவதுறையினரால் உடல் வெப்ப சோதனை மற்றும் தேவைப்படும் இதர பரிசோதனைகள் செய்த பின்னரே மார்க்கெட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.
மார்க்கெட்டுக்குள் மூன்று சக்கர பயணிகள் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்வது முற்றிலும் தடை செய்யப்படும்.
தனிநபர் (பொதுமக்கள்) கொள்முதல் மற்றும் சில்லரை வணிகம் முற்றிலும் தடைசெய்யப்படும்.
மொத்த காய்கறி விற்பனை அங்காடிக்கு வரும் சரக்கு வாகனங்கள் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அனுமதிக்கப்படும்.
காய்கறி வாங்க வரும் வாடிக்கையாளர்களின் (சில்லரை வியாபாரிகளின்) வாகனங்கள் அதிகாலை முதல் காலை 9 மணி வரை அனுமதிக்கப்படும்.
காய்கறி மார்க்கெட்டில் உள்ள நுழைவுவாயில்கள் காலை 9 மணி அளவில் மூடப்படும்.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.