சென்னை: சென்னையில் பல்வேறு மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், அவைகள் விரைவில் திறக்கப்படும் என்றும், கோயம்பேடு மேம்பாலம் டிசம்பர் மாதத்தில் திறக்கப்படும் என்று கூறியவர், கொரட்டூர் பாலம் இம்மாதம் திறக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
சென்னை பல்லாவரம், வண்டலூர் ஆகிய இரண்டு மேம்பாலங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது,
அம்மா இருந்த காலத்தில், நான் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்த போது, கேளம்பாக்கம் சாலை சந்திப்பில் ஏற்படும் அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் கடந்து செல்ல சிரமம் இருக்கிறதென்ற கோரிக்கை அரசுக்கு வந்தவுடன், அம்மா அங்கே ஒரு உயர்மட்டப் பாலம் கட்ட வேண்டுமென்று ஆணையிட்டதற்கிணங்க, வண்டலூர் மேம்பாலம் அமைக்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகள் தற்போது நிறைவு பெற்று இன்று அம்மாவின் நல்லாசியோடு திறந்து வைக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வண்டலூர் மேம்பாலம் சுமார் ரூபாய் 55 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று வழிகளைக் கொண்ட சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலப் பணிகள் 24.2.2014 அன்று தொடங்கப்பட்டு, நிலம் கையகப்படுத்துவதில் சில பிரச்சனைகள் இருந்த காரணத்தால் சற்று காலதாமதம் ஏற்பட்டதை நிவர்த்தி செய்து, விரைந்து பணி மேற்கொள்ளப்பட்டு, இன்றையதினம் மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், இன்றையதினம் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பாலங்கள், புறவழிச் சாலைகள் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக துவக்கி வைக்கப்பட்டுள்ளன, சில பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் வாயிலாக கடலூர், கீழ்மாம்பட்டு, காட்டுமயிலூர், திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் ரோடு பகுதி, இசிஆர் சாலை ஆகிய பகுதிகளில் உயர்மட்டப் பாலங்கள், புதுப்பாலத்திற்கு புறவழிச் சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளன. ராஜீவ் காந்தி சாலையில் பாலம் கட்ட அடிக்கல் நாட்டப் பட்டுள்ளது.
அதேபோல், பல்லாவரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க அம்மா அரசால் உயர்மட்டப்பாலம் கட்டப்படுமென்று அறிவிப்பு வெளியிடப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டு, பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலையில் ரூபாய் 81 கோடி மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலம் விரைவாகக் கட்டி முடிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு இன்று அம்மாவின் அரசால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்பாலத்தினால் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறைந்து, பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.
ரூபாய் 21.96 கோடி செலவில் நடைபெற்று வரும் கொரட்டூர் வரையறுக்கப்பட்ட சுரங்கப்பாதையின் 95 சதவீதப் பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் இந்த பாலப்பணி முழுவதும் நிறைவு பெற்று மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். கொளத்தூர் மேம்பாலப் பணியில் இடதுபுற பாலம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
ரூபாய் 41 கோடி செலவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வலதுபுற பாலப் பணிகள் 90 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன. 2020ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் முழு பணிகளும் நிறைவு பெற்று மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
கோயம்பேடு சந்திப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி ரூபாய் 93.50 கோடி செலவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இதில் 75 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன. 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் முழு பாலப் பணிகளும் நிறைவுபெற்று மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
ரூபாய் 146.41 கோடி செலவில் மேடவாக்கம் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் 85 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன.
வேளச்சேரி முதல் தாம்பரம் செல்லும் இடதுபுற பாலப்பணிகள் 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
கீழ்கட்டளை மேம்பாலப்பணி ரூபாய் 64 கோடி செலவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுமார் 82 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளது.
துரைப்பாக்கத்திலிருந்து பல்லாவரம் செல்லும் பாலப் பகுதி 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் முடிவடையும். இடது புறப்பகுதியானது 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நிறைவு பெற்று மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
திருவொற்றியூர்–பொன்னேரி–பஞ்சட்டி சாலை உயர்மட்டப் பாலம் ரூபாய் 58.64 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. சுமார் 55 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள் விரைந்து முடிப்பதற்கு அரசால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வேளச்சேரி மேம்பாலமும் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் 80 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன. 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
ரூபாய் 19.75 கோடி செலவில் தாம்பரம் நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 50 சதவீதப் பணிகள் நிறைவு பெற்றிருக்கின்றன. ரயில்வே பகுதிப் பணிகளை விரைந்து முடிக்க அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குரோம்பேட்டை, ராதா நகர் வரையறுக்கப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் ரூபாய் 28.99 கோடி செலவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
ரூபாய் 206 கோடி செலவில் பெருங்களத்தூர் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. 2022ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் இப்பணிகள் முடிக்கப்படும்.
சென்னை மாநகரம், அதையொட்டிய புறநகர்ப் பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சென்னைக்குள்ளும், சென்னையிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்வதற்கும் அம்மாவின் அரசு பல்வேறு பாலங்களை கட்டிக் கொடுத்திருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.