தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றிய பெருந்தலைவர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் திமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி பகுதிகளில் தலைவர்களுக்கான மறைமுக தேர்தல், 335 இடங்களில் பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த இடங்களில் இன்று (30-01-2020) தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, பல இடங்களில் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவில்பட்டி ஒன்றிய தலைவர் பதவிக்கு நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். மொத்தமுள்ள 19 உறுப்பினர்களில் 10 பேர் தி.மு.கவுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், அ.தி.மு.க எப்படி வெற்றி பெற முடியும் என தி.மு.க-வினர் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து தேர்தல் அதிகாரியாக சரியான விளக்கம் தெரிவிக்காத நிலையில், கனிமொழிஎம்.பி. தலைமையில் தி.மு.க உறுப்பினர்கள் கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் ஈடுபட்டனர். பின்னர் கனிமொழி எம்.பி தலைமையில் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஒன்றியத் தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தலை மீண்டும் நியாயமாக நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அப்போது செய்தியாளர்களிடம் கூறிய கனிமொழி, இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் எனத் தெரிவித்தார்.