கோவை
தனக்கு தானே பிரசவம் பார்த்துக் கொண்ட பெண்ணின் குழந்தை இறந்ததால் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் உள்ள செட்டிவீதி அருகே உள்ள உப்புக்கார வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார்(38) வசித்து வந்தார். இவர் நகை பட்டறை தொழிலாளி ஆவார். விஜயகுமார் மனைவி புண்ணியவதி (32). க்கு ஏற்கெனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில், கர்ப்பமாக இருந்த புண்ணியவதி மனவருத்தத்துடன் இருந்ததாகத் தெரிகிறது.
இவர் வீட்டில் தனக்குத் தானே பிரசவம் பார்த்துக் கொண்டுள்ளார். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் தொப்புள் கொடியைச் சரியாக அறுக்காத நிலையில், பிரசவமும் சரியாகப் பார்க்காததால் தாயும் சேயும் மயங்கியுள்ளனர்.
அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். குழந்தையைப் பரிசோதித்த அரசு மருத்துவர்கள், சரியாகப் பிரசவம் பார்க்காததால் குழந்தை இறந்ததாகத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பெரிய கடை வீதி காவல்துறை ஆய்வாளர் சாந்தி விசாரணை நடத்தி உள்ளார். புண்ணியவதி மீது இந்தியத் தண்டனை சட்டம் 315- (குழந்தை இறந்து பிறக்க வேண்டும் அல்லது பிறந்த உடன் உயிரிழப்பு ஏற்பட வேண்டும் என்று செயல்படுவது) என்ற பிரிவின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.