கோவை:
கோயம்பத்தூர் மாவட்டம் பெரிய தடாகம் பகுதியில், விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடிய தலித் மக்களை, ஆதிக்க சாதி இந்துக்கள் தாக்கியது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆய்வு செய்தது.
கோவை பெரிய தடாகம் பாரதி நகர் பகுதியில் தாழ்த்தப்பட்ட இந்து குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ஏற்பாடு செய்தனர். இதையடுத்து ஆதிக்க இந்து சாதியினர், கடந்த (செப்டம்பர்) ஐந்தாம் தேதி, இம் மக்களை கடுமையாக தாக்கினர். இதில் சுமார் 30 பேருக்கு காயம் ஏற்பட்டது. ஆறு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துமனை உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர்.
இத் தாக்குதலில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. ஆனால், “வழக்கு பதிந்ததோடு விட்டுவி்ட்டார்கள். மேல் நடவடிக்கை ஏதும் இல்லை” என்று தாழ்த்தப்பட்ட மக்கள் புகார் தெரிவித்தார்கள். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவும் அளித்தார்கள்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான எஸ்.நாகராஜ் தெரிவிக்கையில், “கடந்த மூன்று ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தியை முரசு ஒலித்து, கோலாகலமாக கொண்டாடி வந்தோம். இந்த ஆண்டும் விநாயகர் சிலை அமைத்து, முரசு கொட்டி உற்சாகமாக கொண்டாட திட்டோம், ஆனால், இதற்கு உயர்சாதி இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்தார்கள்.
இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி எங்கள் பகுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். தாக்குதல் குறித்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். அங்கு வழக்கு பதிந்தார்கள். ஆனால் தாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, தேசிய தாழ்த்தப்பட்ட ஆணைய ஆராய்ச்சி அதிகாரி சந்திர பிரபா மற்றும் ஆணைய விசாரணை அதிகாரி லிஸ்டர் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
அப்போது பேசிய லிஸ்டர், “பாதிக்கப்பட்டர்களில் ஆறு குடும்பங்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் அரசு வழங்கியுள்ளது” என்று தெரிவித்தார்.