இலட்சுமி நரசிம்மர் கோயில், தாளக்கரை, மங்கரசவளைய பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம்.

இரணியன் என்னும் அசுரனை அழிப்பதற்காக திருமால் எடுத்த அவதாரமே நரசிம்மர். பக்த பிரகலாதனின் தந்தையான இரண்யன், தன்னை யாராலும் அழிக்க முடியாதபடி வித்தியாசமான வரம் பெற்றிருந்தான். திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து அவனை அழித்தார். அப்போது அவர் மிக உக்கிரமாக இருந்தார். உக்கிரம் தணிக்க மகாலட்சுமி, அவரது மடியில் அமர்ந்தார். நரசிம்மர் சாந்தமானார். இதன் அடிப்படையில் இலட்சுமி நரசிம்மர் கோயில்களில் சுவாமியின் மடியில், மகாலட்சுமி அமர்ந்திருப்பாள். ஆனால், இத்தலத்தில் மகாலட்சுமி, சுவாமிக்கு இடதுபுறம் தனியே இருக்கிறாள். நரசிம்மர், மகாலட்சுமியை இத்தகைய கோலத்தில் காண்பது அரிது.
மூலஸ்தானத்தில் நரசிம்மர் கையில் சங்கு, சக்கரத்துடன் சாந்த மூர்த்தியாக சந்திர விமானத்தின் கீழ் அருளுகிறார். மூலஸ்தானத்தில் சுவாமி, மகாலட்சுமி இருவருமே நின்ற கோலத்தில் இருப்பது விசேஷமான அமைப்பு. நரசிம்மர் பீடத்தில் ஸ்ரீசக்ரம் உள்ளது. அர்த்த மண்டபத்தில் சாளக்ராமம் இருக்கிறது. இந்த சாளக்ராமமே, முதலில் நரசிம்மராக வழிபடப்பட்டுள்ளது. எனவே இதனை “ஆதிமூர்த்தி” என்கிறார்கள்.
பெருமாள் தலங்களில் சுவாமி, ஆதிசேஷன் மீது அமர்ந்த கோலத்தில் இருப்பார். சுவாமி நின்ற கோலத்தில் இருக்கும் தலங்களில், ஆதிசேஷன் அவருக்கு குடையாக தலைக்கு மேலே காட்சி தருவார். இங்கு பிரகாரத்தில் ஒரு விநாயகர் இருக்கிறார். இவரது தலைக்கு மேலே, ஒரு தலையுடன் ஆதிசேஷன் குடையாக காட்சி தருகிறார். இவரை, “சர்ப்ப விநாயகர்” என்று அழைக்கிறார்கள். பெருமாளுக்கான கோயில் என்பதால் இவர் ஆதிசேஷனுடன் காட்சி தருவதாக சொல்கிறார்கள். இராகு, கேது, செவ்வாய் மற்றும் புத்திர தோஷம் உள்ளவர்கள் இவருக்கு திருமஞ்சனம் செய்தும், மஞ்சள் காப்பிட்டும் வேண்டிக்கொள்கிறார்கள்.இக்கோயில் ஒரு ஓடையின் கரையில் அமைந்துள்ளது. தாளம் என்றால் ஓடை என்ற பொருள் உண்டு. எனவே தலம், “தாளக்கரை” என்று அழைக்கப்படுகிறது.
பவுர்ணமி, அமாவாசை, ஏகாதசி, திருவோணம் மற்றும் பிரதோஷ நாட்களில் சுவாமிக்கு விசேஷ வழிபாடு நடக்கிறது. சுவாமி சன்னதி எதிரே கருடாழ்வார் வணங்கியபடி இருக்கிறார். சுவாமி சன்னதியில் எலுமிச்சை, துளசி பிரதான பிரசாதமாக தருகிறார்கள். இதனை வீட்டு பூஜையறையில் வைத்து வணங்கிட வேண்டுதல்கள் நிறைவேறுவதாக நம்பிக்கை.
மகாலட்சுமியின் சகோதரனான சந்திரனே இங்கு சுவாமிக்கு விமானமாக இருந்து காப்பதாக ஐதீகம். எனவே மூலவரின் மேல் உள்ள விமானம் சந்திர விமானம் என்ப்படுகிறது.
🌹அன்புடன்🌹
சோழ.அர.வானவரம்பன்.
+918072055052
திருவிழா:
நரசிம்மர் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை மற்றும் சுவாதி நட்சத்திரத்தில் சிறப்பு பூஜை.
கோரிக்கைகள்:
குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, கடன் நீங்க, கோப குணம் குறைய வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு சந்தனக்காப்பு செய்தும், விசேஷ திருமஞ்சனம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்