டில்லி
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மூடப்பட்டதால் பணி இழந்த விமான ஓட்டிகளுக்காக கொரியன் ஏர் நிறுவனம் இரு நாள் வேலைவாய்ப்பு முகாம் டில்லி மற்றும் மும்பையில் நடத்த உள்ளது.
உலகின் புகழ்பெற்ற விமான சேவை நிறுவனமான கொரியன் ஏர் நிறுவனம் உலகின் 124 நகரங்களுக்கு இடையே விமானசேவை செய்து வருகிறது. இந்நிறுவனம் போயிங் மற்றும் ஏர்பஸ் ரக விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிறுவனத்துக்கு சொந்தமாக உலகெங்கும் உள்ள 44 நாடுகளில் 167 விமானங்கள் உள்ளன. இவற்றில் அகல உடல் கொண்ட பி777-300எஸ் ரக விமானங்கள் அதிக அளவில் உள்ளன.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடன் தொல்லை காரணமாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது. அதனால் அந்த நிறுவனம் தனது சேவையை தற்காலிகமாக முழுவதுமாக நிறுத்தி உள்ளது. இதனால் பல விமானிகள் வேலை இழந்துள்ளனர். தற்போது கொரியன் ஏர் விமான சேவை நிறுவனத்துக்கு 300-400 விமானிகள் தேவைப்படுகின்றனர்.
இது குறித்து நேரடியாக விமானிகளை தேர்ந்தெடுக்க கொரியன் ஏர் நிறுவனம் இரு நாட்கள் வேலை வாய்ப்பு முகாம் நடத்துகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஜெட் ஏர்வேஸ் விமான ஓட்டிகள் சங்கம் கவனித்து வருகிறது. இந்த சங்கம் தனது உறுப்பினர்களான விமான ஓட்டிகளிடம் இது குறித்து பேசி வருகிறது. டில்லி மற்றும் மும்பை நகரங்களில் நடக்க இருக்கும் இந்த முகாம்களில் கொரியன் ஏர் நிர்வாகிகள் கலந்துக் கொள்கின்றனர்.