
அகமதாபாத்: பஞ்சாப் அணிக்கெதிரான லீக் போட்டியில், குறைந்த இலக்கை விரட்டிய கொல்கத்தா அணி,5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப், 20 ஓவர்களில், 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால், கொல்கத்தா பேட்ஸ்மென்களுக்கு மிக எளிய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனாலும், கொல்கத்தா அணி, எளிதாக வெற்றியை நெருங்கிட இயலவில்லை. சற்று சிரமப்பட்டுத்தான், அந்த அணி தனது இரண்டாவது வெற்றியை ஈட்டியது. இந்தப் போட்டியிலும், கொல்கத்தாவின் ஷப்மன் கில் சோபிக்கவில்லை. இந்த தொடர் முழுவதும் அவர் சொதப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் திரிபாதி, 32 பந்துகளில், 41 ரன்கள் அடித்து கைக்கொடுத்தார். சுனில் நரைன் டக்அவுட்டாக, கேப்டன் மோர்கன், 40 பந்துகளில் 47 ரன்கள் அடித்து, இறுதிவரை அவுட்டாகாமல் நின்று அணியைக் காப்பாற்றினார்.
கொல்கத்தா அணி, 16.4 ஓவர்களிலேயே, 5 விக்கெட்டுகளை இழந்து, 126 ரன்கள் எடுத்து வென்றது. இந்த வெற்றியின் மூலம், புள்ளிப் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.