கொல்கத்தா சம்பவம்: சிபிஐ மனுவை உடனே விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில், காவல்துறை ஆணையரிடம் விசாரணை நடத்த சென்ற சிபிஐ அதிகாரிகள், மாநில காவல்துறையால் தடுத்தநிறுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க கொல்கத்தா காவல் ஆணையருக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதி மன்றத்தில்  சிபிஐ அவசர வழக்கு தாக்கல் செய்தது.  மேலும், வழக்கை  இன்றே விசாரிக்க வேண்டும் என்றும் கோரியது.

ஆனால், வழக்கை அவசரமாக விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், மனு குறித்து நாளை விசாரிக்கப்படும் என்று அறிவித்து உள்ளது.

சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக கொல்கத்தா காவல்துறை ஆணையரை விசாரிக்க சென்ற சிபிஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநில அரசை கலைக்க மத்திய பாஜக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடு வதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி, நேற்று இரவு முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்து, சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ்,  காவல் ஆணையருக்கு எதிராக, தங்களிடம் போதுமான ஆதாரங்கள் இருந்த காரணத்தினா லேயே, அவரை விசாரிக்க, சிபிஐ அதிகாரிகள் சென்றதாகவும், இதுகுறித்து உச்சநீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், சிபி தரப்பில் இன்று உச்சநீதி மன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கொல்கத்தா காவல்ஆணையர் ராஜீவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க உத்தரவிடக்கோரியிருந்தது.

மனுவில், சாரதா சிட் பண்ட் புகார் தொடர்பான ஆதாரங்களை கொல்கத்தா கமிஷனர் அழித்து விட்டார் என்றும், ஆதாரம் அழிக்கப்பட்டதற்கு ஆதாரம் எங்களிடம் உள்ளது என்றும் சிபிஐ கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து, ஆதாரம் இருந்தால் கோர்ட்டில் சமர்ப்பியுங்கள்  என்ற உச்சநீதி மன்றம்,  ஆதாரம் அழிக்கப்பட்டிருந்தால் கமிஷனர் வருந்தும் அளவுக்கு கடும் நடவடிக்கை எடுப்போம் என்று கூறிய உச்சநீதி மன்றம் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. ஆனால், வழக்கை இன்று விசாரிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்த நிலையில், நாளை இதுகுறித்து விசாரிக்கப்படும் என்றும் அறிவித்து உள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: CBI director Nageswararao, cbi interim director, CBI moves SC, Mamata Banerjee, Mamata Banerjee  dharna, Nageswararao, Rajeev Kumar, supreme court, Supreme Court refuse, உச்சநீதி மன்றம், காவல் ஆணையர் ராஜீவ்குமார், சாரத நிதி நிறுவனமோசடி, சிபிஐ, நாகேஸ்வரராவ், நாளை விசாரணை, மம்தா தர்ணா, மம்தா பானர்ஜி
-=-