டெல்லி: பயிற்சி மருத்துவர் பாலியல் படுகொலை சம்பந்தமான வழக்கை தானாகவே விசாரணைக்கு எடுத்துக்கொண்டு இன்று விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையிலான மாநில அரசை கடுமையாக சாடியதுடன் இதுதொடர்பாக அறிக்கை அளிக்க உத்தரவிட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளான RG கர் மருத்துவமனைக்கு CISF பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுகலை பெண் பயிற்சி மருத்துவக் கல்லூரி மாணவி ஆகஸ்ட் 8ஆம் தேத) மிகக் கொடூரமான மூறையில் கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அதற்குள் மருத்துவமனை நிர்வாகம் அம்மாநில முதல்வர் மம்தா ஆதரவுடன் ஆதாரங்களை அழிக்கும் செயலில் ஈடுபட்டது. மேலும், அவர்களே ஒரு கும்பலை சேர்த்து மருத்துவமனையை தாக்கி சேதப்படுத்திய நிகழ்வுகளும் அரங்கேறியது.
இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில், ஆரம்பத்தில் அதற்கு அனுமதி மறுத்த மம்தா, பின்னர் போராட்டங்கள் நாடு முழுவதும் பதவியதும் வேறு வழியின்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும் கண்துடைப்புக்காக மருத்துவமனை சஞ்சய் ராய் என்ற மருத்துவமனை பணியாளர் ஒருவரை மட்டும் கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதிலும், தீவிர சோதனை நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவியின் மரணத்திற்கான சாத்தியக் கூறுகள், ஆதாரங்கள் உள்ளிட்டவை கிடைக்கிறதா எனவும், ஆராய்ந்து வருகின்றனர்.
இதற்கிடையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் உடற்கூறாய்வு சோதனையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்மீது 25 காயங்கள் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இறந்த மாணவியின் உடல் ஆகஸ்ட் 9ஆம் தேதி மாலை 6.10 முதல் 7.10 மணி வரை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதில் கைகளைக் கொண்டு கழுத்தை நெரித்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். மேலும், பாலியல் வன்கொடுமை நடந்ததற்கான மருத்துவ ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது. அந்த மாணவியின் பிறப்புறுப்பில் 151 கிராம் ஆண் திரவம் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. உடலில் சில இடங்களில் ரத்தம் உறைந்திருக்கிறது. மூக்கு, கழுத்து, கை, கண்ணம், உதடு உள்ளிட்ட வெளிப்பகுதிகளில் 16 இடங்களிலும், கழுத்து, உள்தசை, உச்சந்தலை என உள்பகுதிகளில் 9 இடங்களில் மிக கொடூரமான காயங்கள் இருக்கிறது.
தனக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவத்தை எதிர்த்து அவர் போராடி இருக்கிறார். மேலும் கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் நகத்தில் இருந்த ரத்த மாதிரியும் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கும் சஞ்சய் ராயின் ரத்த மாதிரியும் ஒன்றாக இருப்பதால் அவர் கொலையில் நேரடியாக ஈடுபட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது.
இந்த நிலையில் கொலை சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என குற்றம் சாட்டப்படும் நிலையில் இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை சிபிஐ தொடங்க இருக்கிறது.
குறிப்பாக மருத்துவமனை முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு இருக்கும் நிலையில் கொலையாளி என அடையாளம் கண்டுபிடித்து கைது செய்யப்பட்டு இருக்கும் சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனை இன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை முடிவுகளின் அடிப்படையில் இது வழக்கு அடுத்த கட்டத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இந்த சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. இன்ைறய விசாரணையின்போது மம்தா அரசை கடுமையாக விமர்சனம் செய்தது.
விசாரணையின்போது, கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை சம்பவம் நடந்து சுமார் 12 மணி நேரத்துக்குப் பிறகுதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டி, கொல்கத்தா காவல்துறைக்கு கேள்வி எழுப்பியிருக்கிறது.
இதுதான் பெண் மருத்துவருக்கு கொடுக்கும் மரியாதையா? என கேள்வி எழுப்பியதுடம், இந்த சம்பவம் நடந்த மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
இந்த சம்பவம் நடைபெற்றதும் எவ்வாறு ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் திடீரென குவிந்தனர். இது பற்றி கொல்கத்தா காவல்துறைக்கு எப்படி எதுவும் தெரியாமல் போயிருக்கிறது? பிறகு காவல்துறை என்னதான் செய்துகொண்டிருக்கிறது? என சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன், நாங்கள் மிகவும் கவலை அடைகிறோம்.
மேற்குவங்கத்தில் ஏன் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை? அமைதியாக போராடுவோர் மீது மேற்குவங்க அரசு தனது அடக்குமுறையை காட்டக் கூடாது. என்று கூறிய நீதிபதிகள்ட,, மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மேற்குவங்க அரசு தவறிவிட்டது.
மருத்துவர்கள் அல்லது பொதுமக்கள் மீது எந்த அரசும் அதிகாரத்தை ஏவி விடக்கூடாது என்று எச்சரித்ததுடன், இது கொல்கத்தா மருத்துவமனை பிரச்னை மட்டும் அல்ல; ஒட்டுமொத்த மருத்துவர்களின் பிரச்னை. உயிரிழந்த பெண்ணின் புகைப்படங்கள் அதிகளவில் வெளியாகியுள்ளது; காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
மேலும், பணிபுரியும் இடங்களில் மருத்துவர்களின் பாதுகாப்பு பிரச்னைக்கு உரியதாகவே இருக்கிறது. பயிற்சி மருத்துவர் உயிரிழப்பு மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை எழுப்புகிறது.
மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய பணிக் குழுவை அமைக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உத்தரவிட்டுள்ளார்.
பின்னர், கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலை வழக்கில் விசாரணை நிலையை ஆக.22ஆம் தேதிக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.