சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக சென்னையில் இன்று 3வது நாளாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பல பகுதிகள் தண்ணீரில் மிதக்கும் நிலையில், கொளத்தூர் தொகுதியும் தண்ணீரால் சூழப்பட்டு தத்தளித்து வருகிறது.
இதையடுத்து, அந்த தொகுதியின் எம்எல்ஏவும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், கொட்டும் மழையிலும், தனது தொகுதிக்கு சென்று மக்களை நேரில் சந்தித்து தேவையான உணவுப்பொருள்களை வழங்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
கொளத்தூர், திருவிக நகர், வில்லிவாக்கம், ஐசிஎப், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான நிவாரணம் மற்றும் உணவுப் பொருள்களை வழங்கினார்.
இதைடுத்து, பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளான உணவு, பாதுகாப்பான இடம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி கொடுக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதன்படி, சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திக்கா குளம் தெருவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏராளமான பொதுமக்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்பாட்டில் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு காலை சிற்றுண்டியை பொது மக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் கொளத்தூர் பகுதி செயலாளர் ஐ.சி.எப் முரளிதரன், தலைமை கழக வழக்கறிஞர் சந்துரு, உள்ளிட்ட ஏராளமான தி.மு.க நிர்வாகிகள் உடனிருந்தனர்.