கோவை: கோடநாடு கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்ற அன்று 516 தகவல் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், 316 பேரிடம் மறு விசாரணை நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெ.மறைவைத் தொடர்ந்து அவரது கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடைபெற்றது. இது தொடர்பான விசாரணை கடந்த அதிமுக ஆட்சியில் முறையாக நடத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் ஆட்சி மாறியதும், திமுக அரசு மீண்டும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை கையில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. அதற்காக மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்கு, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் சயான், வாளையார் மனோஜ், ஜித்தின் ஜாய் , ஜம்சிர் அலி ஆகியோர் ஆஜரானார்கள் .
அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் , கனகராஜ் ஆஜரானார்கள். வழக்கு வாதத்தின் போது, அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரைக்கும் 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கின் மூளையாக செயல்பட்டு சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தவர் கனகராஜ். அவரின் பெயரில் இருந்த 6 சிம்கார்டுகள் உட்பட 16 செல்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் நடந்தபோது நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர்பு கொண்டதில் 516 தகவல் பரிமாற்றம் நடந்திருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அந்த தகவல் பரிமாற்றங்களின் உண்மையை தன்மையை அறிய ஆய்வுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது என நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி முருகன் வழக்கின் மறு விசாரணையை அக்டோபர் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் 3வது முறையாக விசாரணை…