கோத்தகிரி,
ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் பலியானது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது.. இங்கு ஏராளமான அறைகளை கொண்ட பிரமாண்ட பங்களா உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு அரசு பாதுகாப்பு விலக்கப்பட்டு தனியார் நிறுவனத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
கடந்த 24-ந்தேதி அதிகாலை எஸ்டேட்டின் 10-வது நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூர்(57) என்பவர் முகமூடி கொள்ளை கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த 9-வது நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி கிருஷ்ணபகதூர்(37) என்பவரையும் கும்பல் தாக்கியது. இதில் அவர் மயங்கினார்.
அதைத்தொடர்ந்து எஸ்டேட் உள்ளே சென்ற கொள்ளையர்கள் அங்கு ஜெயலலிதா தங்கும் அறையின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே சென்று கொள்ளையடித்து உள்ளனர்.
கொள்ளை குறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இந்த கொலை – கொள்ளை சம்பவம் குறித்து துப்புதுலக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
அதையடுத்து போலீசாரின் விசாரணையில் கேரளா திருச்சூரை சேர்ந்த சந்தோஷ், சதீசன், சிபு ஆகியோரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் இவர்கள் கொடநாடு கொலை சம்பவத்தில் கூலிப்படையாக செயல்பட்டது தெரிய வந்தது. அவர்கள் கொடுத்த தகவலை தொடர்ந்து கேரளா மலப்புரத்தில் மேலும் 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
அவர்கள் 6 பேரையும் ஊட்டிக்கு நேற்று நள்ளிரவு போலீசார் அழைத்து வந்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.
விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்துக்கு அச்சாரம் போட்டது ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவரான கனகராஜ் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கனகராஜின் நடவடிக்கையை கண்காணிக்கத் தொடங்கினார். இதை அறிந்த கனகராஜ் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு தப்பி சென்றுள்ளார்.
இதை அறிந்த தனிப்படை போலீசார் சேலத்துக்கு விரைந்தனர். அதையறிந்த கனகராஜ் தனது ஒருவரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் போலீசாரிடம் சரண் அடைய சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசுகார் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கனகராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். ப
லியான கனகராஜூக்கு கலைவாணி என்ற மனைவியும், 1 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
கொடநாடு வழக்கில் மூளையாக செயல்பட்ட கனகராஜ் விபத்தில் பலியானது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவருடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த சயன் என்பவரை தேடி வருகின்றனர்.
கனகராஜ் ஜெயலலிதாவிடம் 2 வருடங்களாக கார் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது ஜெயலலிதாவுடன் கொடநாடுக்கு வந்துள்ளார். அந்த வகையில் கொடநாடு பங்களா பற்றிய முழு விவரங்களும் இவருக்கு அத்துபடியாக இருந்தது.
இந்த நிலையில் கனகராஜ் ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால் கடந்த 2012-ம் ஆண்டு அவரை பணியில் இருந்து நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.